தமிழ் சினிமாவில் சமீபகாலமாக குத்து பாடல்கள் பிரபலமாகி விடுகின்றன. தவிர இதை ஐட்டம் சாங்ஸ் என்று சினிமாவிலும் ரசிகர்களும் சொல்கின்றனர். ஐட்டம் என்பது ஒரு இழிவான வார்த்தையாக சமூகத்தில் கருதப்படுகிறது. இன்று பல முன்னணி நடிகைகள் கூட இந்த குத்தாட்ட பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடுகின்றனர்.
அந்த வகையில் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா பாடலுக்கு நடிகை ரோஜாவும் காவலய்யா காவலய்யா பாடலுக்கு தமன்னாவும் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தாவும் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரனும் சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன் பாடலுக்கு மீனாவும் கூலி படத்தில் மோனிஷா பாடலுக்கு பூஜா ஹெக்டேவும் சிறப்பு நடனம் ஆடியிருக்கின்றனர்.
இப்படி பல நடிகைகள் ஐட்டம் சாங் என்ற பெயரில் குத்தாட்டம் போட்டு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது வழக்கமாக உள்ளது. ஜெயிலர் படத்தில் காவாலய்யா ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா தற்போது ஐட்டம் என்று அந்த பாடலை அழைப்பதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி சிறப்பு நடனம் ஆடுவதை ஐட்டம் பாடல் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று அவர் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தமன்னா கூறுகையில், திரைப்படத்தில் வரும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை.
அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல. இந்த அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும்.
நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டும் பார்க்காமல் அவர்களின் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை தமன்னா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். காவலய்யா பாடலில் தமன்னா அணிந்திருந்த கவர்ச்சியான உடையும் அவரது ஆபாசமான உடல் அசைவுகளையும் பார்த்தால் அதை ஐட்டம் சாங் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது என்று ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.





