தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கான வெற்றி விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தளபதி விஜய், நடிகை திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், ரத்னகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,
லியோ படத்திற்கான முதல் மேடை இதுதான். நான் ஆசைப்பட்டது போல இது வெற்றிக்கான மேடையாக இருக்கிறது. நான் அதிகம் தயார்படுத்திக் கொண்டு இங்கு வரவில்லை. லியோ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விஜய் அண்ணா, தயாரிப்பாளர் என ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பட பூஜையில் இருந்து, இந்தப் படத்திற்கு என எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. ஆனால் இதன் முதல் மேடையே வெற்றி விழாவுக்கான மேடையாகி இருக்கிறது. படத்தின் பைனல் அவுட்புட்டை பார்த்துவிட்டு, விஜய் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். என்னை கட்டிப்பிடித்து அவர் முத்தமும் கொடுத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் லோகேஷ் கனகராஜிடம் சில கேள்விகளை எழுப்பினர். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று அவர்கள் கேட்க, ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சுட்டு இருக்காங்க என்று நகைச்சுவையாக பேசினார் லோகேஷ். அப்படி என்றால் லியோ படத்தில் இரண்டாம் பாகத்திற்கு அந்த ஹெலிகாப்டரில்தான் வருவீர்களா என்று தொகுப்பாளர்கள் கேட்க, விஜய் அண்ணா கண்ண காமிச்சா போதும் பண்ணிரலாம் என்று லோகேஷ் பதிலளித்தார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க ஆசை. இரண்டு மூன்று திரைப்படங்களில் அவரை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. நிச்சயம் அவரை எனது திரைப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்வேன் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகை திரிஷா பேசியதாவது,
சத்யா என்னும் கதாபாத்திரத்தை வழங்கியதற்கு லோகேஷ் கனகராஜுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவேளை அவர் என்னை கொலை செய்யவில்லை. எல் சி யு வில் நானும் பங்கு வகிக்கிறேன் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். விஜயுடன் வேலை செய்வது என்பது பள்ளிக்கூட நண்பரை, நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பது போன்றது. என்னுடைய 20 வருடத் திரையுலக வாழ்வில், அவருடன் இருந்த பயணம் மிகவும் நீண்டது. விஜய் சார் எனக்கு காரப்பொறி வாங்கித் தரவில்லை. அதனால் விஜய்யுடன் இன்னொரு படம் பண்ணலாமா மக்களே என்று பேசி கலகலப் பூட்டினார்.





