தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள படம் பரிமளா அண்ட் கோ. இதில் சஞ்சனா மிஷ்கின் சாண்டி யோகிபாபு சந்தோஷ் சோபன் அனந்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் பரிமளா அண்ட் கோ படம் குறித்து நடிகை ஊர்வசி கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை இந்த படம் மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு நடிகராக வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே இந்த கதை தான் உண்மையான ஹீரோ என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும்.
இந்த கதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. முழு திரைக்கதையும் கேட்ட பிறகு இன்னும் விரிவாக கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு பிறகு இந்த படத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
ஏனெனில் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. அதற்கு முன்பு கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன. சில கதைகள் எனக்கு பிடிக்காது. சில கதைகள் ஜெயராமுக்கு பிடிக்காது. ஆனால் இந்த கதை வந்த போது இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது.
அதற்கு காரணம் இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை. உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும் இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட ஒரு கதை. மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். எனக்கு சில நாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன.
மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்த படத்தை செய்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று நடிகை ஊர்வசி கூறியிருக்கிறார். வருகிற 28ம் தேதி பரிமளா அண்ட் கோ படம் ரிலீஸாக உள்ளது.





