தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி. மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை வென்றவர். நடிப்பு ராட்சசி என்று நடிகர் கமல்ஹாசன் ஊர்வசியை செல்லமாக குறிப்பிடுவது உண்டு. முதலில் நாயகியாக நடித்த ஊர்வசி இப்போது அம்மா கேரக்டரில் தமிழ் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் முந்தானை முடிச்சு படம் மூலம் கே பாக்யராஜ் இயக்கத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஊர்வசி. கமலுடன் மைக்கேல் மதனகாமராஜன் மகளிர் மட்டும் படங்களில் நடித்திருந்தார். சத்யராஜ் சரத்குமார் பிரபு அர்ஜூன் ஜெயராம் என பல ஹீரோக்களுடன் நடித்த ஊர்வசி இன்னும் நடிகர் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஊர்வசி கூறியதாவது, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை. ரொம்ப நாளாக அந்த ஆசை இருக்கிறது. ஏன்னா அவருடைய காமெடி என்பது சின்ன பசங்க காமெடி மாதிரியே இருக்கும். அவங்களுக்கு பிடிச்ச காமெடியா இருக்கும்.
அதனால் ரஜினியுடன் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டேன். இப்பவும் எனக்கு அந்த ஆசை உண்டு. முதலில் அவருடன் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்த படம் நல்லவனுக்கு நல்லவன். அப்போது அந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கிற வாய்ப்பு வந்தது. ஆனா அப்போ என் மேனேஜரா இருந்தவங்க அந்த கேரக்டர் வேண்டாம், ஊர்வசி நடிக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க.
இப்போ ரஜினிக்கு மகளா அந்த படத்துல நடிச்சுட்டா அப்புறம் அவர்கூட ஜோடியாகவே நடிக்க முடியாதுன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அதே மாதிரி இன்னும் சில படங்களில் நடந்து விட்டது. எல்லாமே ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்கள்தான் என்று நினைக்கிறேன். நான் மகான் அல்ல போன்ற சில படங்கள் என்று நினைக்கிறேன்.
அதுக்கு அப்புறம் ரொம்ப நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் முத்து படத்தில் நடிக்கிற ஒரு வாய்ப்பு வந்தது. ஆரம்பத்துல இன்னோசென்ட் கேரக்டர் மாதிரி வந்து பிறகு பெரிய அளவுல அந்த கேரக்டர் ரஜினி மீனா போன்றவர்களையே ஓவர்டேக் பண்ற மாதிரி கேரக்டர்ன்னு சொன்னாங்க. அது ரஜினி சார் படமா மட்டும்தான் இருக்கணும் என்று நான் கூறிவிட்டேன். பிறகு அதிலும் நான் நடிக்கவில்லை என்று அந்த நேர்காணலில் நடிகை ஊர்வசி கூறியிருக்கிறார்.





