இந்த ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்களில், ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கோட். அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு என பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு தான் இதன் இயக்குனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர். கல்பாத்தி அர்ச்சனா தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே பிகில் படத்தை எடுத்திருந்தார்.
இந்தப் படத்திற்காக ஏராளமான சுவாரஸ்ய விஷயங்களை வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. முக்கியமாக படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதே ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஒரு விஜய் இளைஞர் கதாபாத்திரத்தில் வருகிறார். இதற்காக, ஏ ஐ தொழில்நுட்பத்தை படக்குழுவினர் கையில் எடுத்துள்ளனர்.
முக்கியமாக ஏ ஐ தொழில்நுட்பத்தை வைத்து மறைந்த நடிகர் விஜயகாந்தை, ஒரு காட்சியில் கொண்டு வந்திருக்கிறார் வெங்கட் பிரபு. இது மட்டுமல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் படத்தில் வருகிறார்கள். திரிஷா ஒரு பாடலுக்கு வந்து போகிறார். சிவகார்த்திகேயனுக்கும் ஒரு கேமியோ ரோல் இருக்கிறதாம்.
இப்படி வெங்கட் பிரபு வைத்திருக்கும் விருந்தை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். படத்தில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரங்களும், கோட் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். மைக் மோகன், பிரசாந்த், லைலா, பிரபுதேவா, சினேகா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, வைபவ், அஜ்மல், யோகி பாபு, வி டிவி கணேஷ் என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து விசில் போடு பாடல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, சின்ன சின்ன கண்கள் என்ற பாடலையும் படக்குழு ரிலீஸ் செய்திருந்தது. இதுபோக, படத்திலிருந்து ஷார்ட்ஸ் எனப்படும் சிறிய வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் இரண்டு விஜயும் பைக்கில் செல்வது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில், படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ரஷ்யாவில் போலீஸ் அதிகாரியாக செயல்படுவாராம். சாட்ஸ் வீடியோவில் விஜய் காரில் செல்லும்போது, கார் கண்ணாடியில் எதிரொலிக்கும் விதமாக அவர் ஊரை விட்டு செல்லுமாறு, ரஷ்ய மொழியில் சிலர் பதாகை ஏந்தி இருந்த காட்சிகள் இருந்தது. அதில், போலீஸ் அதிகாரியே இந்தியாவுக்கு செல்லுங்கள் என்று ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்ததாக சினிமா விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கோட் திரைப்படம் 2050 ஆம் ஆண்டுக்கும், தற்போதைய காலத்திற்கும் இடையேயான கதைக்களம் என்று கூறப்படுகிறது.





