நடிகர் ரஜினிகாந்த், இப்போது நடித்து முடித்துள்ள படம் வேட்டையன். படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஓய்வுக்காக சென்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜூன் மாதம் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு அவர் குறிப்பிட்டுச் சொல்லும் முக்கிய நாளில் கூலி படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் இப்போதே பலத்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் கடந்த 10 ஆண்டுகளாக நடிப்பில் முழு தீவிரம் காட்டி வருகிறார். முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, குசேலன் போன்ற படங்களில் நடித்த காலகட்டத்தில் 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் இடைவெளியில்தான் ஒரு படம் நடிப்பார். கதைகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவார். இடையிடையே மாதக்கணக்கில் இமயமலைக்கு சென்று விடுவார். கேஎஸ் ரவிக்குமார். சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் என முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க மட்டுமே அனுமதி தருவார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு தன்னை மாற்றிக் கொாண்ட ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா படங்களில் நடித்தார். படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படம், பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்தது. ஆனால் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார், சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பாட்ஷா படம் போன்ற ஒரு அதிர்வை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 600 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைத்தது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற பிறமொழி ஸ்டார் நடிகர்களின் நடிப்பும் படத்துக்கு பலத்தை கொடுத்தது. குறிப்பாக வில்லன் விநாயகம், வேற லெவலில் சம்பவம் செய்திருந்தார்.
தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டு போயிருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படம் தந்த பெரிய வெற்றியால் குதூகலமடைந்தார். தொடர்ந்த தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து கூலி படத்தில் நடிக்க தயாராகி விட்டார். ஆனால் இடையில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் பெரிய தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூலி படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 172 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தின் 2ம் பாகம்தான். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்த படத்தில்தான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ளார். படத்துக்கு குக்கூம் என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயிலரை போலவே ஜெயிலர் 2 படமும் மாஸ் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மாரி செல்வராஜ் அல்லது வேறு இயக்குனர் படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.





