தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஏஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மதராஸி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கன்னடத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்திலும் இவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இப்போது கன்னடத்தில் டாக்ஸிக் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை நயன்தாராவும் நடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தெலுங்கு படம் டிராகன் என்ற படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ருக்மணி வசந்தின் ஆபாசமான பிகினி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு முன்பும் சில நடிகைகளின் வீடியோக்கள் புகைப்படங்கள் இப்படி வெளியாகி உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் இத்தகைய புகைப்படங்கள் வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்று தற்போது நடிகை ருக்மணியின் வீடியோவையும் உருவாக்கி இணையத்தில் பரவ விட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகை ருக்மணி வசந்த் கடுமையான எதிர்ப்பையும் தனது கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி ருக்மணி வசந்த் கூறியதாவது, என் குழுவினரும் நானும் ஆன்-லைனில் பரவிவிற்கும் ஏஐயால் உருவாக்கிய படங்களை பார்த்தோம். அவை என்னுடையவை என்று கூறப்படுகின்றன.
இந்த படங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இத்தகைய மாற்றி அமைக்கப்பட்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதும் பரப்புவதும் மிகவும் பொறுப்பற்ற செயல் மற்றும் தனி உரிமையின் மீதான மீறலாகும். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.
இந்த படங்களை உருவாக்கியவர்கள் மற்றும் பரப்பியவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை மற்றும் சைபர் குற்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இத்தகைய உள்ளடக்கங்களை பகிர்வதையோ அல்லது இவ்வாறு ஈடுபடுவதையோ அனைவரும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று நடிகை ருக்மணி வசந்த் எச்சரித்துள்ளார்.





