நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பணிகளை முடித்திருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, தென்காசி, மதுரை, கடலூர் பகுதிகளில் நடைபெற்றது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது ஐம்பதாவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். பவர் பாண்டி திரைப்படத்தை தொடர்ந்து அவரே இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கவும் செய்கிறார். இதில் தனுஷின் அண்ணன் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஜூலை மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை கடற்கரையில் மிகப்பெரிய பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாம். வடசென்னையை மையப்படுத்தி இந்தப் படத்தை தனுஷ் எடுத்து வருகிறார். கிட்டத்தட்ட மூன்றே மாதங்களில் 90 சதவீத பணிகளை முடித்திருக்கும் தனுஷ், அவுட்டோர் ஷூட்டிங் பணிகளுக்காக காரைக்குடி கிளம்பி இருக்கிறார்.
டிசம்பர் மாதம் இதற்கான பணிகளை முடித்துவிட்டு, தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் தனுஷ் இணைகிறார். இதன்பிறகு இந்தியில் ஒரு திரைப்படம், அருண் மாதேஸ்வரனுடன் மீண்டும் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம் என பிசியான அட்டவணையை அவர் கையில் வைத்திருக்கிறார். இப்படியான சூழலில்தான் தனுஷ் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மூன்றாவது முறையாக இயக்கும் அந்த திரைப்படத்தில், தனுஷ் கேமியோ ரோலில் தான் நடிக்கப் போகிறாராம். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், தனுஷின் நெருங்கிய உறவினர்தான் கதாநாயகனாக நடிக்கிறாராம். ஆனால் அவர் யார் என்று தகவல் தான் இப்போது கோலிவுட் கேள்வி குறியாக இருக்கிறது. ஒருவேளை அது அனிருத்தாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





