ஜெயிலர் படத்தை தொடர்ந்து, ரஜினி 170 என்ற தற்காலிக பெயரிட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கி இருக்கிறது. தொப்பி அணிந்த கெட்டப்பில், வாலிப தோற்றத்தில் ரஜினி நடித்த காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இளமையான அந்த தோற்றத்தில் ரஜினியின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத்பாசில், மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகையர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிரூத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜெயிலர் பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்ததால், இந்த படத்தையும் அதே போல் பெரிய ஹிட் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டு. படப்பிடிப்பு நடந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை துவங்கிய ரஜினி 170 படக்குழு, இங்கு ஒருவாரம் அதாவது ஏழு தினங்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு, நாகர்கோவிலில் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து சென்னைக்கு திரும்பி வரும் படக்குழு இங்கு, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முக்கிய காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகு, ரஜினி 170 படக்குழு, மும்பைக்கு செல்கிறது. அங்கு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கும் முக்கிய காட்சிகளை படம்பிடிக்க உள்ளது. இந்த படத்தில், அமிதாப் பச்சனுக்கு மிக பவர்புல் ஆன கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெயிட்டான அவரது ரோல், படத்தில் அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
முதலில், அமிதாப் பச்சனை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து இங்குதான் படப்பிடிப்பை நடத்த, படக்குழு திட்டமிட்டது. ஆனால், அவர் வருவதாக இருந்தால் அவருடன் மருத்துவக் குழு, பாதுகாவலர்கள், அவரது ஊழியர்கள் என குறைந்தபட்சம் 50 முதல் அதிகபட்சமாக 80 பேர் வரை வர வாய்ப்புள்ளது. அவரது சம்பளமே 20 கோடி ரூபாய் என்ற நிலையில், 15 நாட்கள் வரை அவர் கால்ஷீட் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு அவர்களும் தமிழ்நாட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கான போக்குவரத்து செலவுகள், பயணங்களுக்கான ஏற்பாடு, அவர்கள் வசதியாக தங்குமிடம், உணவு வசதி, அவர்களுக்கான சிறப்பு இதர வசதிகள் என, பலவிதங்களில் படக்குழு பராமரித்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், மும்பைக்கே செல்ல முடிவு செய்துள்ளது ரஜினி 170 படக்குழு. ஏற்கனவே, 30 கோடி ரூபாய்தான் படத்துக்கான தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இப்படியும் செலவு சுமை அதிகரிப்பதை தவிர்க்க மும்பைக்கே செல்லும் இந்த முடிவுக்கு படக்குழு வந்துள்ளது.





