துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி கடந்த மாதம் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாக அது பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. படமும் சொல்லிக் கொள்ளும் வகையில் பெரிதாக ஓடவில்லை.
இப்படியான சூழலில்தான் பலரது பார்வையும் தற்போது அஜித்தின் அடுத்த திரைப்படம் ஆன குட் பேட் அக்லி மீது விழுந்துள்ளது. மார்க் ஆண்டனி என்னும் மாபெரும் வெற்றியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. கேங்ஸ்டர் பாணியில் கதையை உருவாக்கி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். விடாமுயற்சியை தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது போக அர்ஜுன் தாஸ், பிரசன்னா தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக டீசர் ரிலீஸ் செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. விஜய்யின் முந்தைய பட சாதனைகளையும் முறியடித்தது.
படத்தில் விண்டேஜ் அஜித்குமாரை காண முடிந்ததாக பலரும் பாராட்டினார்கள். பில்லா வாலி ரெட் அமர்க்களம் படங்களில் இருந்த அஜித்தை, ஆதிக் ரவிச்சந்திரன் காட்சிகள் மூலம் காட்டி இருந்தார். மிக முக்கியமாக ரெட் படத்தில் அஜித் கூறும் அது வசனமும் இடம் பெற்று இருந்தது. இப்படி டீசர் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப் போவது யார் என்ற பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படியான சூழலில், ஆதிக் ரவிச்சந்திரன் கதையில் அஜித்குமார் நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளாராம். குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றி பெற்றால், உடனடியாக இதே கூட்டணி மீண்டும் இணையும் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





