நடிகர் அஜித் குமார் தற்போது ஐரோப்பாவில் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே துபாயில் நடைபெற்ற ரேசில் அவரது அணி மூன்றாவது பரிசை வென்றது. இந்த உற்சாகத்துடன் தற்போது அவர், அடுத்தடுத்த பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு அவர் அக்டோபரில் தான் அடுத்த திரைப்படத்திற்கான சூட்டிங் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கான பட முடிவைதான் இன்னும் அஜித் குமார் எடுக்கவில்லை. இருப்பினும் அவரது லைன் அப்பில் ஏகப்பட்ட இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். விஷ்ணுவர்தனை தொடங்கி தனுஷ் வரை இந்த பட்டியல் நீள்கிறது. ஆனால் முடிவு தான் இன்னும் எட்டப்படவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்தும் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அண்மையில் வெளியான டீசர் தான். முழுக்க முழுக்க அஜித்தை மையப்படுத்தியே காட்டப்பட்ட அந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் யூடியூபில் வெளியான 24 மணி நேரத்திலேயே அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இவர்களது மகனாக வருகிறார் கார்த்திகேயா தேவ்.. படத்தின் ஆக்சன் காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் தந்தைக்கு மகனுக்குமான உறவையும் இந்த திரைப்படம் கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, குணச்சித்திர நடிகர் பிரபு, தெலுங்கு நடிகர் சுனில், மற்றும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோரும் படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் இரட்டையர்களாக வந்தவர்களில் ஒருவரான ரகுராம் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறாராம். தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் கால் பதிக்கிறது.
ஏப்ரல் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முந்தைய நாளான ஒன்பதாம் தேதி இரவு, ஒரு பிரீமியர் ஷோவை ஒளிபரப்ப தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. சென்னை கோவை மதுரை நெல்லை உட்பட முக்கியமான நகரங்களில் இவ்வாறு செய்யலாம் என்று பிளான் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய இரவே ரசிகர்கள் பலர் செல்போனில் முக்கியமான காட்சிகளை எடுத்து வெளியிட்டு விடுவார்கள் என்று பலரும் கூறியதால் தற்போது அந்த முடிவிலிருந்து தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கி இருக்கிறது.





