தமிழ் சினிமாவில் அஜீத்குமார் உச்சம் தொட்ட ஒரு நடிகராக இருக்கிறார். எனினும் டாப் ஸ்டார் நடிகராக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் எளிமையானவராக இருந்து வருகிறார். சமீபத்தில், பொது இடங்களில் தன் பெயரை சொல்லி கடவுளே என ரசிகர்கள் சொல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
நடிகர் விஜய்தான், அஜீத்குமாரின் நேரடியாக போட்டியாளராக தமிழ் சினிமாவில் கருதப்படுகிறார். ஆனால் இப்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகி விட்டார். அதனால் அஜீத்குமாருக்குஆ விஜய் இடத்தில் யாருமே போட்டியில்லை என்ற நிலையில், அடுத்த பொசிஷனுக்கு வர அவர் ஆர்வம் காட்டலாம். ஆனால் அவர் வழக்கம் போல் கார் ரேஸ், பைக் ரேஸ் என விளையாட்டில் ஆர்வமாக இருந்து வருகிறார்.
அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி ஷூட்டிங்கையும் அவர் நிறைவு செய்துவிட்டதாகவே தகவல் வெளியாகி உள்ளது. வருகிற பொங்கலுக்கு அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம், வெளியாகிறது. துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜீத்குமார் நடித்த இந்த படம் திரைக்கு வருகிறது.
சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். அட்டக்கத்தி, பீட்சா, ஜிகர்தண்டா, மெட்ராஸ், குக்கூ, எனக்குள் ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர். அவர் நடிகர் அஜீத்குமாரை ஒரு முறை விமானநிலையத்தில் ஏதேச்சையாக சந்தித்துள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் கூறுகையில், ஒருமுறை ஏர்போர்ட்டில் நானும் அஜீத்குமார் சந்தித்துக் கொண்டோம். நான் யார் என்றே தெரியாமல் என்னுடைய கையை பிடித்துக்கொண்டு 5 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் நான் என்னை பற்றி எதுவுமே அவரிடம் சொல்லவில்லை. என்ன பண்றீங்கன்னு கேட்டார். மியூசிக் பண்றேன் சார் அப்படீன்னு மட்டும்தான் சொன்னேன்.
அதற்கு அவர் நல்லா பண்ணுங்க, நல்லா வருவீங்க என்று வாழ்த்துகள் சொன்னார். அப்போ பக்கத்தில் இருந்த என் மனைவி, நான் இசையமைத்த படங்கள் என்னென்ன என்று அஜீத்குமாரிடம் கூறிவிட்டார். இதை கேட்டதும் நடிகர் அஜீத்குமார் என்னை தனியா அழைச்சிட்டு போய் ஸாரி சென்னார் என்று ஒரு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு அஜீத்குமார் மேன்மையான குணம் கொண்டவர் என்றும் அவரை பாராட்டியிருக்கிறார்.





