தமிழ் சினிமாவில், நேரம் தவறாமை என்பது மிகப்பெரிய நல்ல பழக்கமாக பார்க்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பலரும் சொல்வது உண்டு. அதிகாலை 5 மணிக்கு ஷூட்டிங் என்றால், மேக்கப்புடன் ரெடியாகி, காலை 4.45 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார். அவரது பஞ்ச்வாலிட்டியை பார்த்து படத்தில் நடிக்கும் மற்றவர்கள் மிரண்டு போவார்கள்.
அதே போல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களும் இதுபோன்று நேரந்தவறாமை என்ற நல்ல பழக்கத்தை பின்பற்றுவர்கள். ரஜினியிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள், கதை சொல்லி, ரஜினிக்கு பிடித்துவிட்டால் குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை துவங்கி விட வேண்டும். அதற்கு பின் ரஜினியிடம் முன்கூட்டியே தகவல் சொல்லாமல் தாமதப்படுத்தினால், அந்த படத்தையே நிராகரித்து விடுவது ரஜினியின் பழக்கம்.
ஏனெனில், நேரத்தை வீணாக்குவது என்பது மிகப்பெரிய தவறு. அதுவும், சினிமா போன்ற கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யும் மிகப்பெரிய தொழிலில் ஒருவர் செய்யும் தவறு, படப்பிடிப்பு நாட்களை கூடுதலாக்கும். தயாரிப்பாளருக்கு பலவிதங்களில் செலவுகளை இழுத்துவிடும். பலருக்கும் பலவிதங்களில் சிரமங்களை கொடுக்கும்.
இந்நிலையில், அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த 4ம் தேதி முதல் அஜர்பைனானில் நடந்து வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கடந்த 20 நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இங்கு 60 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இன்னும் கூடுதலாக 30 நாட்கள் வரை, படப்பிடிப்பு காலம் அதிகரிக்கும் ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் படத்தின் ஹீரோ அஜீத்குமார், தினமும் காலையில் இரண்டு மணி நேரம் தாமதமாக படப்பிடிப்புக்கு வருகிறார். இது ஒருநாள், இரண்டு நாள் அல்ல, 20 நாட்களாக இதே மாதிரி தான் தாமதமாக படப்பிடிப்புக்கு வருகிறார் என்று தெரிய வந்துள்ளது.
கடந்தாண்டில் துணிவு படத்துக்கு பிறகு துவங்கப்பட வேண்டிய விடாமுயற்சி படம், பல மாதங்களுக்கு பிறகு தாமதமாக இப்போதுதான் துவங்கப்பட்டு இருக்கிறது. இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ தினமும் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து, இன்னும் படப்பிடிப்பை தாமதப்படுத்துகிறார். சாதாரண நடிகர் என்றால், அட்வைஸ் பண்ணலாம். ஹீரோவிடம் போய் கண்டிசன் போட முடியுமா என, தவியாய் தவிக்கின்றனர் விடாமுயற்சி படக்குழுவினர்.





