- Advertisement -
Homeபொழுதுபோக்கு9 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்... நண்பரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நடிகர்...

9 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்… நண்பரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நடிகர் அஜித்…

- Advertisement -

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சைதை துரைசாமி. இவர் சென்னை மாநகராட்சியின் மேயராகவும் செயல்பட்டு இருக்கிறார். இவரது மனிதநேய அறக்கட்டளையில் ஏராளமானோர் போட்டித் தேர்வுகளில் படித்து வெற்றி பெற்று அரசாங்கத்தின் உயர்ந்த பதவிகளில் இருக்கின்றனர்.

இவரது மகன் வெற்றி துரைசாமி சுற்றுலாவுக்காக இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கடந்த நான்காம் தேதி காரில் பயணம் மேற்கொண்ட போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் வெற்றி பயணித்த கார், சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.

- Advertisement -

இந்த விபத்தில் உள்ளூர் கார் ஓட்டுநரான தன்ஜின் நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். வெற்றி துரைசாமியின் நண்பரான கோபிநாத் என்பவர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமியின் நிலைமை மட்டும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல்துறையினர் திணறினர். இதனை அடுத்து, ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோரும் களத்தில் இறங்கினர். நீர் மூழ்கி வீரர்களும் வெற்றியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தனது மகனை கண்டுபிடித்து கூறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி சோகத்துடன் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தின் அருகே, சட்லஜ் ஆற்றின் கரையோரம் பாறை ஒன்றில் மனித மூளை திசுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக வெற்றி துரைசாமியின் பெற்றோரிடமும் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர். இப்படியான சூழலில் ஒன்பது நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நீர் மூழ்கி வீரர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், அவரது உடலை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை சென்னையில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தாம்பரம் ராஜகீழ்பாக்கத்தில் உள்ள வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நடிகர் அஜித்குமார் சென்றார். அங்கு அவரது குடும்பத்தினரிடம் அவர் ஆறுதல் கூறினார். அஜித் மற்றும் வெற்றி இருவரும் நண்பர்கள். பல்வேறு சுற்றுலா பயணங்களை இவர்கள் மேற்கொண்ட நிலையில், தனது நண்பர் மறைவிற்கு அஜித் நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்