நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரஜினி கமல் விஜய் அஜித் இவர்கள் நான்கு பேரும் தான் இப்போது தமிழ் சினிமாவில் நான்கு தூண்களாக பார்க்கப்படுகின்றனர். நடிகர் அஜீத் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அஜித் ரசிகர்களை பலத்த ஏமாற்றமடையச் செய்துள்ளது. ஆனால் மிக விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட்பேட் அக்லி படம் வரும் மே 10ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குட் பேட் அக்லி படத்தில் நடித்துக்கொண்டே இடையிடையே விடாமுயற்சி படப்பிடிப்பிலும் அஜித்குமார் கலந்து கொள்கிறார்.
விஜய், அஜீத்குமார் இடையே பல ஆண்டுகளாக நல்ல நட்பும் தொடர்பும் இருந்து வருகிறது. ஆனால் அஜீத்குமாரை பொருத்த வரை விஜயை நண்பர் என்றுதான் குறிப்பிடுகிறார். அதேபோல் விஜயும் அஜித்தை தனது நண்பர் என்று தான் குறிப்பிட்டு வருகிறார். ரஜினி கமல் போலவே, இவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல இணக்கமான நட்பு இருந்து கொண்டுதான் வருகிறது.
ஆனால் தேவையின்றி ரசிகர்கள்தான் தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்த, ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, ரசிகர்களாக பிளவுபட்டு நிற்கின்றனர். ஆனால் ரசிகர்களின் சண்டையும், சச்சரவுகளும் ஒருவிதத்தில் தங்களது படங்களுக்கு விளம்பரமாகவும், வளர்ச்சிக்கும் உதவுவதால் அவர்களும் அதை கண்டிப்பதோ, தடுப்பதோ இல்லை.
இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில், அமர்க்களம் உள்ளிட்ட அஜீத் படங்களை இயக்கிய டைரக்டர் சரண் பேசியிருக்கிறார். அஜித் குறித்த சில சுவாரசியமான தகவல்களை கூறிய அவர், நானும் அஜித்குமாரும் சில நேரங்களில் இரவு நேரங்களில் தியேட்டரில் படம் பார்க்க செல்வோம். ஒரு முறை நடிகர் விஜய் நடித்த வில்லு படம் பார்க்க இருவரும் சென்று வந்தோம். அப்போது அங்கு இருக்கும் அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ரகசியமாக அஜித் குமார் என்னுடன் வந்தார். படத்தை மிகவும் ரசித்து பார்த்தார்.
அதே போல் நடிகர் சிவா நடித்த தமிழ் படம் என்ற படத்தையும் நாங்கள் இருவரும் தியேட்டரில் சென்று பார்த்தோம். அப்போது அந்த படத்தில் வரும் சில காட்சிகளை பார்த்து விழுந்து விழுந்து அஜித்குமார் சிரித்தார் என்று இயக்குனர் சரண் இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். விஜய் படங்களை தியேட்டரில் சென்று பார்க்கும் அளவுக்கு, அஜித்குமார் அவர் மீது நல்ல நட்புடன்தான் இருக்கிறார் என்பது இது விஜய் ரசிகர்களுக்கு தெரிய வந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.





