தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். பிறகு விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டில் என்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் மேடையில் ஆவேசமாக பேசினார். அன்று முதலே விஜய், திமுக இடையே கடுமையான மோதல் ஆரம்பமாகி விட்டது.
தொடர்ந்து அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் ஆளும்கட்சி திமுக குறித்தும் ஸ்டாலின் குறித்தும் தொடர்ந்து விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பல கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இதுவரைக்கும் விஜய் பேசிய விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான பதிலும் தந்தது இல்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. நடிகர் விஜய் தொடர்ந்து உங்களை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். அதுபற்றி நீங்கள் எதுவுமே பேசுவதில்லையே, பதில் சொல்லாமல் தவிர்க்கிறீர்களே ஏன்? என்று கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் அதற்கு பதிலளித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி பற்றிக் கூட நான் கடுமையாக எதுவும் பேசுவதில்லை. அவர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அவர் பேசுகிற பிரச்னைகளுக்கு அவர் கேட்கிற கேள்விகளுக்கு தான் நான் தேவையான பதில்களை சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
நான் கடுமையாகவோ விமர்சனமாகவோ எதையும் பேசுவது இல்லை. அதே மாதிரி நீங்க விஜயை பத்தி கேட்கறீங்க. திமுகவை பொருத்த வரைக்கும் புதுசா யாராச்சும் கட்சி தொடங்கறவங்க அரசியல் பண்ண நினைக்கிறவங்க பூராவும் திமுகவை விமர்சனம் பண்ணிதான் பேசுறது வழக்கம். இது தொடர்ந்து நடந்துட்டு இருக்கு. அதை தொடர்ந்து நானும் பார்த்துட்டு இருக்கிறேன்.
ஆனால் இன்னைக்கு வரைக்கும் திமுக அரசு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. உலகம் பூராவும் எங்கு போனாலும் திமுக பத்திதான் புகழ்ந்து பேசிட்டு இருக்காங்க. அதனால் புதுசா யார் வந்தாலும் திமுகவை எதிர்த்தோ திமுகவை விமர்சனம் பண்ணியோ அப்படிதான் வளர முடியும் என்று நினைக்கின்றனர். அது தவறு. திமுக ஒரு ஆக்க சக்தி என்று ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.





