தமிழ் சினிமாவில் சமகால கட்டத்தில் 1990களில் நடிப்பு துறைக்கு வந்தவர்கள் நடிகர் அஜீத்குமார் மற்றும் விஜய். இதில் நடிகர் அஜீத்குமார் எந்த சினிமா பின்புலமும் இல்லாத நிலையில், அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு வசந்த் இயக்கிய ஆசை படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படம் அஜீத்குமாருக்கு பெரிய வெற்றியை தந்தது.
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகமானவர் விஜய். துவக்கத்தில் சில படங்களில் நடித்தாலும் விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு லவ் டுடே, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் விஜய்க்கு முன்னணி நடிகராகும் வாய்ப்பை தந்தது.
ஆனால் இப்போது நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களாக டாப் வெலில் உள்ளனர். விஜய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க ரூ. 163 கோடி சம்பளம் வாங்குகிறார். இவர்களது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர்.
இந்த சூழலில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். சமீபத்தில் தனது அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்திய விஜய், தனது அரசியல் எதிரி திமுகதான் என்றும் பிரகடனப்படுத்தி விட்டார். 2026ல் முதல்வர் நாற்காலியில் அமர்வதே தன் லட்சியம் என்று கூறி வருகிறார்.
திமுகவை பொருத்த வரை முதுமை காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தளர்ந்த நிலையில் காணப்படுகிறார். நடந்து செல்லவும், வாகனத்தில் ஏறி இறங்கவும் சிரமப்படுகிறார். அதனால்தான் கட்சி பணிகளிலும், அரசியல் பணிகளிலும் முழுமையாக செயல்பட அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக அமர வைத்திருக்கிறார். அடுத்த முறை திமுக தேர்தலில் வென்றால், ஸ்டாலின் முழு ஓய்வில் இருக்கும் நிலையில், நேரடியாக தமிழக முதல்வராக உதயநிதி அமரவே அதிக வாய்ப்புள்ளது.
அதனால் வருகி 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவில் உதயநிதிக்கும், தவேக கட்சி தலைவர் விஜய்க்கும் தான் களத்தில் நேரடி போட்டி இருக்கும். இந்த சூழலில், துபாயில் கார் பந்தயத்தில் கலந்துக்கொள்ளும் அஜீத்குமாருக்கு உதயநிதி வாழ்த்து கூறியிருந்தார். இப்போது நேற்று உதயநிதி பிறந்த நாளுக்கு அஜீத்குமார் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியிருக்கிறார். அஜீத்குமார், விஜய் நண்பர்களாக உள்ள நிலையில், உதயநிதியுடன் அஜீத்குமார் நட்பு காட்டுவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.





