நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், இந்த பட்டம் வேண்டாம் என்று கூறினார். அதற்கு பதில் தன்னை ஏகே என்று அழைக்கலாம் என்றும் அவர் ஐடியா கொடுத்தார். ஆரம்பத்தில் அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், இப்படி ஒரு உயரத்தை பிடிக்க ஏராளமான சவால்களை எதிர்கொண்டார்.
அமராவதி திரைப்படத்திற்கு பிறகு, ஆசை திரைப்படத்தில் அவர் நடித்தார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த வசந்த் எடுத்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற வெளி உலகில் தெரிய ஆரம்பித்தார் அஜித் குமார். அந்த சமயத்தில் அஜித்தின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படங்கள் காதல் கோட்டை மற்றும் காதல் மன்னன்.
கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் காதல் என்ற புது கான்செப்ட் அறிமுகப்படுத்திய இயக்குனர் அகத்தியன் அதில் சிக்ஸர் அடிக்க லக்கி ஸ்டார் ஆக உருவெடுத்தார் அஜித் குமார். அந்த சமயத்தில் இந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது. இதன் பிறகு சரண் இயக்கத்தில் உருவான காதல் மன்னன் திரைப்படமும் அஜித்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
காதல் மன்னன் திரைப்படத்தில் தனக்கென ஃபார்முலாவை புகுத்தி ஆச்சரியப்படுத்திய சரண், அதன் பிறகு அஜித்துடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றினார். இதில் அஜித்தின் 25 வது திரைப்படமாக அமர்க்களம் உருவாகியது. ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அந்த சமயத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் சூட்டிங்கின் போது அஜித், ஷாலினி இடையே காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே அமர்க்களத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக சரணுடன் இணைந்தார் அஜித். ஏறுமுகம் என டைட்டில் வைக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு சூட்டிங் நடத்தப்பட்டது. 40 சதவீத பணிகள் முடித்த போது, திரைக்கதையில் அந்த அளவு திருப்தி இல்லாததால் படத்திலிருந்து விலகி விட்டாராம் அஜித். இருப்பினும் மனம் தளராத சரண், ஸ்கிரிப்ட்டை வேறொரு விதத்தில் வடிவமைத்து அதை விக்ரமிடம் கூற ஜெமினி திரைப்படம் உருவானது. விக்ரமின் கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றியை அந்த படம் கொடுத்தது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் வேஷ்டி சட்டையுடன் அஜித் இருந்த கெட்டப்பை வைத்தே, அட்டகாசம் திரைப்படத்தை சரண் எடுத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் – சரண் கூட்டணி அசல் படத்தில் இணைய, அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.





