2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச் வினோத் இதனை இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்று வசூலையும் ஈட்டியது. கிளைமாக்ஸ் மட்டும் சரியில்லை என்று கூறினாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் படம் நன்றாக வந்திருப்பதாகவே பலர் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் வசூலை துணிவு திரைப்படம் முறியடித்ததாகவும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அஜித்குமாருக்கு எந்த திரைப்படமும் வெளியாகவே இல்லை. அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்ற நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் படம் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு, அஜித்திற்கான மாஸ் காட்சிகள் இல்லாதது, கதையிலும் ஏற்பட்ட சலிப்பு என ஒட்டுமொத்தமாகவே அந்த திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கும் பிடிக்காமல் போனது. இருப்பினும் விடாமுயற்சி ஓரளவு வசூலை ஈட்டியதாகவே சினிமா விநியோகஸ்தர்கள் கூறி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களிலேயே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காகவே இந்த திரைப்படத்தை ஆதிக் எடுத்திருந்தார். ஒன்று அஜித் குமாரை பிறர் புகழ்வது போன்ற காட்சிகள், அப்படி இல்லை என்றால் அஜித் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் காட்சிகள் என படம் முழுக்க ஒரே ரகத்தில் எடுக்கப்பட்டிருந்தது.
அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தால், படம் சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் ஈட்டியதாக சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்க்கிறார் அஜித்குமார். இதற்கான படப்பிடிப்பு, விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இப்படியான சூழலில் அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற அட்டகாசம் திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். சரண் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் அஜித் குமார் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மாஸ் காட்சிகள் பல இருக்கும் இந்த திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





