துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே இந்த ஆண்டு வெளியாகாதது உறுதியாகி இருக்கிறது.
ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த குட் பேட் அக்லி திரைப்படம், கோடை விடுமுறைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு படம் வெளியாகி இருந்தது.
அதன் பிறகு லியோ மற்றும் கோட் என விஜய்க்கு அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. ஆனால் அஜித்திற்கு எந்த படமும் வெளியாகாமல் இருப்பது அவர் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கான பணிகளை அஜித் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பேட்ச் ஒர்க் பணிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால் அதன் வேலைகள் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக, ஸ்பெயின் நாட்டிற்கு அஜித்குமார் சென்றுள்ளார்.
அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் சூட்டிங் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு கார்பந்தயத்தில் அஜித்குமார் கவனம் செலுத்த இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐரோப்பிய கார் பந்தயத்தில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் அஜித்குமார் ரேசிங் குழுவை அவர் ஆரம்பிக்க உள்ளார்.
இப்படி தொடர்ந்து கார்பந்தயம் பிறகு பைக் ரேஸ் என அஜித் கவனம் செலுத்த இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அவர் திரைத்துறையில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு மாதங்கள் கார்பந்தயம் பைக் டூர் இதையெல்லாம் முடித்துவிட்டு, பிறகு குடும்பத்துடன் தனது நேரத்தை அவர் செலவழிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாவது ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகும் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





