நடிகர் அஜித் குமார் தற்போது இரண்டு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ஒன்று விடாமுயற்சி. மற்றொன்று குட் பேட் அக்லி. இதில் விடா முயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். படத்தில் திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதேபோல் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லியை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். மைத்திரி மூவிஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் இதன் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.
விடாமுயற்சியின் சூட்டிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த சமயத்தில் குட் பேட் அக்லியில் கவனம் செலுத்தினார் அஜித்குமார். இந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியின் பணிகள் சூடு பிடித்திருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் அதற்கான பணிகளில் மகிழ்திருமேனி ஈடுபட்டுள்ளார். இதில் தனக்கான போர்ஷன்களில் அஜித் நடித்தார்.
இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விடாமுயற்சி படம் தொடர்பான முதல் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அது அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. நடு ரோட்டில் அஜித் நடந்து வருவது போலவும், அவர் கையில் ஒரு பேக் இருப்பது போலவும் இருந்த போஸ்டர் வெளியாகி இருந்தது.
இருப்பினும் ஷூட்டிங்காவது நடைபெறுகிறது என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். திடீரென அஜர்பைஜான் நாட்டில் இருந்து அஜித்குமார் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அவர் திடீரென சென்னை திரும்பியதற்கான காரணம் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்தின் மனைவியான ஷாலினிக்கு, சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தனது மனைவியை பார்த்துக் கொள்வதற்காகவே அஜித் குமார் சென்னை வந்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவியுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் குமார் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.





