ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லோகேஷ் கனகராஜின் திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்பட்டதாகவும், முக்கியமாக பல காட்சிகளில் லாஜிக்கே இல்லை என்றும் பலரும் கூறினர். இருப்பினும் இந்த திரைப்படத்தின் வசூல் என்பது எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. படம் வெளியான நான்கு நாட்களில் மட்டும் 404 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
தொடர்ந்து பத்து நாட்களில் இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
முதலில் சென்னையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிறகு தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் சூட்டிங் நடத்தினார்கள். அதன் பிறகு கர்நாடக மாநிலம் மைசூருக்கு படக்குழு டிராவலானது. இந்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.
முக்கியமாக இதில் தெலுங்கு நடிகர் பாலையா இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே முந்தைய பேட்டியில் கூறியிருந்த நெல்சன், ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் பாலையாவை நடிக்க வைக்க யோசனை இருந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்க பாலையா இதில் இடம் பெற்று இருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதுபோக மலையாள நடிகர் பகத் பாஸில் படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அண்மையில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து இதன் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் ரஜினிகாந்துக்கு ஒரு கதை சொல்லியதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் மகாநதி, கல்கி ஆகிய திரைப்படங்களை எடுத்த தெலுங்கு இயக்குனர், நாக் அஸ்வின் ரஜினிகாந்துக்கு ஒரு கதை கூறியிருப்பதாகவும் அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த திரைப்படத்தில் நாக அஸ்வினுடன் ரஜினிகாந்த் இணைய வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.





