நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு சூறாவளி என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த உண்மைதான். எந்த கேரக்டராக இருந்தாலும், அது கமல்ஹாசன் நடித்துவிட்டால், பிறகு அவரை விட அந்த கேரக்டரை யாராலும் சிறப்பாக நடித்துவிட முடியாது என்பதுதான் அவரது நடிப்பாற்றலின் வெளிப்பாடு.
நாயகன், மூன்றாம் பிறை, இந்தியன் ஆகிய 3 படங்களுக்காக இதுவரை தேசிய விருது பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசன், ஒவ்வொரு படத்திலுமே தேசிய விருது வாங்கும் அளவுக்கு சில காட்சிகளில் தன் உன்னத நடிப்பை உச்சகட்டமாக வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கலங்கடித்து விடுவார். குறிப்பாக பாபநாசம் படத்தில் கடைசி சில நிமிட காட்சிகளில் அழுதபடி கமல் பேசுவது ரசிகர்களை பதற வைக்கும்.
தெனாலி, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், ஹேராம் என கமல் நடித்த படங்களில் எல்லாம், ஏதாவது சில காட்சிகளில் அவரது உச்சப்பட்ச நடிப்புக்கான காட்சிகள் எப்படியும் அமைந்துவிடும். குணா படத்தில் ஒவ்வாரு காட்சியிலும் கமலின் நவரச நடிப்புக்கு தேசிய விருதுகளை கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.
நடிப்பில் மட்டுமின்றி, மார்க்கெட்டிங்கிலும் தனது நடிப்புக்கான மதிப்பான சம்பளத்தை பெறுவதிலும் கமல்ஹாசன் மிக தெளிவாக இருப்பார். 20 ஆண்டுகளுக்கு முன் நடிகர் ரஜினிகாந்தை, நீங்கள் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என்று முதலில் யோசனை சொன்னவரே கமல்ஹாசன். இப்போது ரஜினி ரூ. 140 கோடி, கமல் ரூ. 150 கோடி ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குகின்றனர்.
கடந்த 1996ம் ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் அவ்வை சண்முகி. பாண்டியன் என்ற கேரக்டரில் மீனாவின் கணவராகவும், அவ்வை சண்முகி என்ற மாமி கேரக்டரில் வீட்டு வேலைக்கார பெண்ணாகவும் கமல் நடித்திருப்பார். இதில் மாமி வேடத்தில் கமல், ஒரு வயதான பிராமணப் பெண் போலவே காட்சி தருவார். மாமி கேரக்டரில் கமல் நடிப்பில் பல எல்லைகளை கடந்திருப்பார்.
மிஸஸ் டவுட் பயர் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் பாண்டியன், மாமி என்று 2 ரோல்களில் நடிக்க நியாயமாக ரூ. 1.5 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் நடிகர் கமல். ஆனால் அதற்கு தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை. அப்படி என்றால், நீங்கள் தரும் சம்பளத்துடன் 4 ஏரியாக்களில் இந்த படத்தை வெளியிடும் உரிமை கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவ்வை சண்முகி படத்தால், 4 ஏரியாக்களில் இருந்து மட்டும் ரூ. 5 கோடிக்கு மேல் கமலுக்கு லாபம் கிடைத்துள்ளது. இப்படி வியாபார யுக்தியால், தன் உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்ற புத்திசாலிதான் நடிகர் கமல்ஹாசன்.





