மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் திரில்லர் கொண்ட கதையாக இருக்கும். இப்போது இவரது இயக்கத்தில் பலரது எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கும் திரைப்படம் தான் விடா முயற்சி. முதல்முறையாக அஜித்குமார் மகிழ் திருமேனியுடன் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான போதே அதன் மீது பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே நடத்தப்பட்டது. படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடித்திருக்கிறார் திரிஷா. வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
லைக்கா நிறுவனம் விடா முயற்சி திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவாளராக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அது குறித்த அப்டேட்கள் மட்டும் வெளியாகாமல் இருந்தன. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இது குறித்து கேட்டு வந்தும் தயாரிப்பு நிறுவனம் வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில் காட்சி அமைப்பும் அனிருத் இசையும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். அப்போதே படம் பொங்கலுக்கு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்க, அவர்களை அதிருப்தியில் ஏற்படுத்தும் படி அறிவிப்பு ஒன்று வெளியானது. புத்தாண்டு தினத்தன்று வெளியான அந்த அறிவிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இதனால் ஏகே ரசிகர்கள் நொந்து போயினர். இப்படியான சூழலில் விடாமுயற்சி திரைப்படத்திற்கான ட்ரெய்லர் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
விடாமுயற்சி திரைப்படம் முழுக்க முழுக்க கன்டென்ட் ரீதியான திரைப்படம் என்பது அதன் ட்ரெய்லரை பார்க்கும்போதே உறுதியாகிறது. ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இப்படி ட்ரெய்லர் பலருக்கும் பிடித்திருக்கும் சூழலில் விடாமுயற்சி, வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.





