அஜித் குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதன் சூட்டிங் தொடங்கியது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதுபோக, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. கிட்டத்தட்ட சூட்டிங் ஆரம்பித்து ஆறு மாதங்களை தாண்டி இருக்கும் வேலையில், இப்போது வரை படப்பிடிப்பு முடியவில்லை. ஏன் படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விடாமுயற்சி என்னானது என பலரும் கேள்வி எழுப்பி இருந்த வேலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இதுவரை படத்தில் இது மட்டும் தான் நடந்திருக்கிறது என்று தோன்றும் அளவுக்கு, ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியில் இருக்கிறது. அஜித் பிறந்தநாளான நேற்று கூட, படத்தில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை படம் முடக்கப்பட்டு விட்டதா என்று எண்ண தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில், அஜித்தின் அடுத்த படம் தொடர்பான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த படத்தின் இயக்குனர். நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆதிக் நடித்திருந்தார். அப்போது அஜித்திற்கும் ஆதிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் ஆதிக், அஜித்திடம் கூறிய கதை தான் தற்போது படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வெள்ளை முடியிலேயே காட்சியளிக்கும் அஜித்குமார் இந்த திரைப்படத்திற்கு டை பூசுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையும் இந்த திரைப்படத்தில் இணைக்க ஆதிக் முயற்சி செய்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவை தாண்டி, வெளி மாநிலத்திலிருந்து முக்கிய நட்சத்திரங்களையும் ஆதிக் களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இது நிச்சயம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதற்கான சூட்டிங் வரும் பத்தாம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி பிலிம்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. வீரம் படத்திற்குப் பிறகு, தேவி ஸ்ரீ பிரசாத் அஜித் படத்திற்கு இசையமைக்கிறார்.





