துணிவு படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இப்படியான சூழலில் அஜித் அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மீண்டு வந்த ஆதிக் ரவிச்சந்திரன் தான், அஜித் குமாரை வைத்து இயக்குகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வீரம் படத்திற்கு பிறகு, அஜித் திரைப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் தயாரிக்கிறது. ஆனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதற்குள் படக்குழுவினர் சூட்டிங் சென்று விட்டனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதில் அஜித் பங்கேற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மூன்றே மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை முடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் குட் பேட் அக்லி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் அஜித்தை, இளம் வயது கதாபாத்திரத்தில் காட்ட ஆதிக் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்காக டி.ஏஜிங் தொழில்நுட்ப முறையை பயன்படுத்த இருக்கிறார்கள். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. இதற்கான பிளாஷ்பேக் காட்சியில், அஜித்தை இளம் வயது கதாபாத்திரத்தில் காட்ட முடிவு செய்து இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும் இதேமுறையைதான் படக்குழு கையில் எடுத்திருக்கிறது. இரண்டு விஜய் கதாபாத்திரத்தில் ஒரு விஜய்யை இளமையான தோற்றத்தில் காட்ட டி ஏஜிங் முறை பயன்படுத்தப்படுகிறது. தற்போது அஜித் திரைப்படத்திற்கும் இந்த தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருப்பதால், பலரும் இது குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.





