- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜர்பைஜானில் ஆட்டத்தை முடித்துக் கொண்ட விடாமுயற்சி படக்குழு... அடுத்ததாக கால் பதிக்க போகும் ஊர் எது...

அஜர்பைஜானில் ஆட்டத்தை முடித்துக் கொண்ட விடாமுயற்சி படக்குழு… அடுத்ததாக கால் பதிக்க போகும் ஊர் எது தெரியுமா?…

- Advertisement -

சிறுத்தை சிவாவிடம் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குனர் ஹெச் வினோத்துடன் மூன்று திரைப்படங்களில் நடித்தார். இதில் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிங்க் திரைப்படம், நேர் கொண்ட பார்வை என்னும் பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. எதிர்பார்த்த விமர்சனத்தை இந்த திரைப்படம் பெற்றிருந்தாலும் மிகப் பெரிய வெற்றியை இது அடையவில்லை.

இதைத் தொடர்ந்து இருவர் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது. பிறகு வினோத் அஜித் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகி வெற்றி பெற்றது. கலவையான விமர்சனத்தை பெற்ற துணிவு திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்ததால் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து லைக்கா நிறுவனம் படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

முதலில் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகளால், அவர் படத்தில் இருந்து விலக அந்த இடம் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவதாக இருந்தாலும், அதன் தலைப்பான விடாமுயற்சி என்பது ரசிகர்களுக்கு அந்த அளவு பிடிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் எதற்கு வி சென்டிமென்ட்டில் படம் வைக்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். ஆனால் இதையெல்லாம் தயாரிப்பின் மூலம் கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. மே மாதம் இதன் அறிவிப்பு வெளியானாலும் படபிடிப்பு என்னமோ அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அஜித்தான் என்று பலரும் கூறினர். படத்தில் கமிட் ஆகி விட்டு, பைக்கை எடுத்து ஊர் சுற்றியதால் இந்த நிலைமை என்றும் பலர் பேச ஆரம்பித்தனர்.

இப்படியான சூழலில் அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது. இதில், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். ஆனால், படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. சூட்டிங் பணிகளில் போது வெளியான புகைப்படங்களை வைத்தே இவர்கள் படத்தில் இடம்பெற்று இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர். அதேசமயம் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் குறித்த தகவலும் வெளியாகாமலேயே உள்ளது.

இப்படியான சூழலில் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டு அனைவரும் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை லண்டனில் நடத்த மகிழ்திருமேனி திட்டமிட்டு இருப்பதாகவும், அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சற்று முன்