சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய ஹெச் வினோத்துடன் இணைந்த அஜித்குமார், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு திரைப்படங்களில் நடித்தார். இதில், பாலிவுட் திரைப்படம் ஆன பிங்க்கை ரீமேக் செய்து மேற்கொண்ட பார்வை திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற, அடுத்ததாக வெளிவந்த வலிமை திரைப்படம் தோல்வி அடைந்தது.
இதன் பிறகு மூன்றாவது முறையாகவும் ஹெச் வினோத் – அஜித் ஜோடி இணைந்து துணிவு படத்தை உருவாக்கியது. கடந்த பொங்கலன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இந்த படத்தின் சூட்டிங் போதே, அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதால், படத்தில் இருந்து அவர் வெளியேறினார். இதனால், அஜித் 62வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழ ஆரம்பித்தது. இதற்கான உத்தேச பட்டியலை சினிமா விமர்சகர்கள் வெளியிட, அதில் விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, அட்லி உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி, லைகா நிறுவனத்தின் ப்ராஜெக்டிற்குள் வந்தார். அஜித் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்றும் அறிவித்தது. எப்போதுமே வி சென்டிமென்ட்டை தனது படத்தில் வைக்கும் அஜித்குமார், இதிலேயேயும் அதைத் தொடர்வதாக சினிமா விமர்சனங்கள் கூறினர்.
இது ஒரு பக்கம் இருக்க, விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்ட நாள் முதல், நடிகர் அஜித் பைக்கை தூக்கிக்கொண்டு வெளிநாட்டிற்கு பறந்ததால் சூட்டிங் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஒரு கட்டத்தில் விடா முயற்சி தொடங்குமா அல்லது வீண் முயற்சி ஆகுமா என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர். நடிகர் அஜித்திற்கு என்னதான் ஆச்சு என்ற கேள்விகளும் எழ ஆரம்பித்தன.
இப்படியான சூழலில், பைக் டூரை முடித்து வந்த அஜித், ஒரு வழியாக மகிழ்திருமேனியை சந்தித்து படத்திற்கான பணியில் இறங்கினார். முதலில் புனே, ஹைதராபாத் நகரங்களிலும், பிறகு லண்டனிலும் விடாமுயற்சியை எடுக்க மகிழ்திருமேனி திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது திடீரென அவரது பிளான் மாறி உள்ளது. படத்தில் முக்கால்வாசி பணிகளை துபாயில் வைத்து எடுக்கவே படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக நடிகர் அஜித்தும் துபாய்க்கு பறந்து உள்ளார். இதையடுத்து சூட்டிங் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் படக்குழு, விநாயகர் சதுர்த்தியன்று வேலையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





