நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகராக இருந்தவர். அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் புலன் விசாரணை போன்ற படங்கள் எல்லாம் சக்கைப் போடு போட்ட காலகட்டமாக அது இருந்தது.
இயக்குனர்களின் நடிகராக மட்டுமின்றி மக்கள் விரும்பும் ஒரு அபிமான நட்சத்திர நடிகராகவும் விஜயகாந்த் இருந்தார். பெண் ரசிகைகள் அதிகமுள்ள ஒரு நடிகராகவும் விஜயகாந்த் இருந்தார். ஏனெனில் அவர் ஆரம்பத்தில் நிறைய குடும்ப கதை படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்தார். இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய சில படங்கள் விஜயகாந்துக்கு பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜயகாந்த் குறித்து இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, நடிகர் விஜயகாந்த் நடிப்பில் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பெரிய முன்னணி ஸ்டார் இமேஜில் இருந்த அவருக்கு நிறைய விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவர் ஒரு விளம்பர படத்தில் கூட நடிக்க மறுத்துவிட்டார்.
இதுபற்றி ஒருமுறை நான் அவரிடம் பேசிய போது, என்ன விஜி விளம்பர படங்களில் நடிக்க இவ்வளவு ஆபர் வருது, ஏன் வேண்டாம்ங்கறீங்க என்று வெளிப்படையாக கேட்டேன். அதற்கு விஜயகாந்த், விளம்பரத்தில் ஒரு கூல்டிரிங்கை விளம்பரம் செய்றோம். அதை வாங்கி நடித்து விட்டு, ஆஹா ரொம்ப நல்லா இருக்கு, நீங்களும் குடிங்க என்று சொல்கிறோம்.
ஆனா அதை வாங்க முடியாத ஏழைங்க எத்தனையோ பேர் இருப்பாங்க, நம்ம ஹீரோ வாங்கிட்டாரே, நம்ம வாங்கணும் என்று நினைப்பாங்க. இன்னொன்னு அதை குடிச்சா என்ன பக்கவிளைவுகள் வரும் என்று நமக்கு தெரியாது. பணம் வாங்கீட்டு நாம நடிச்சுட்டு போயிடலாம். ஆனா அது ரொம்ப தப்பு சார் என்று சமூக பொறுப்புணர்வோடு எனக்கு பதில் சொன்னார் விஜயகாந்த்.
இந்த சமூக பொறுப்புணர்வு என்பது எல்லா ஹீரோக்களுக்குமே ரொம்ப முக்கியம். எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஹீரோக்களை தெய்வமாக கும்பிடற நாடாக தமிழ்நாடாக இருக்கிறது. அந்த சமூக பொறுப்புணர்வு காரணமாக விஜயகாந்த் விளம்பர படங்களில் நடிக்க மறுத்து விட்டார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





