நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இந்த படம் ரிலீஸான முதல் நாளிலேயே 275 கோடி ரூபாய் வசூலித்தது. 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலித்தது. இப்போது 20 நாட்கள் கடந்த நிலையில், 1600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. புஷ்பா 2 படம் 2000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 2 ரிலீஸாவதற்கு முந்தைய நாளில் 4ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இதில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனும் படக்குழுவுடன் படம் பார்க்க அங்கு வந்தார். அப்போது பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அல்லு அர்ஜூனை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த கூட்டத்தில், நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
அவர் தனது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் தியேட்டருக்கு வந்திருந்த நிலையில், அவரது 9 வயது மகனும் இந்த நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கடந்த 20 தினங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவனின் உடல் நிலையில் இப்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தியேட்டரில் ரசிகை ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். பிறகு ஒரு நாள் சிறையில் இருந்த அவர், 4 வாரங்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் இந்த ஜாமீனை ரத்து செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய ஐதராபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று ஐதரபாத் போலீசார், நடிகர் அல்லு அர்ஜூனை ஸ்டேஷனுக்கு வரவழைத்து 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தியேட்டருக்குள் வந்த களேபரங்களை சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து அல்லு அர்ஜூன் கண் கலங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜூனின் பாதுகாவலர் ஆண்டனி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் சினிமா தியேட்டருக்குள் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் இருந்த சிறுவனின் உடல்நிலை சற்று தேறிவரும் நிலையில், அல்லு அர்ஜூனின் அப்பா அல்லு அரவிந்த், சிறுவனின் மேல்கட்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 கோடி நிதி தருவதாக அறிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தயாரிப்பாளர் சார்பில் ரூ. 50 லட்சம், இயக்குனர் சுகுமாறன் ரூ. 50 லட்சம், நடிகர் அல்லு அர்ஜூன் தரப்பில் ரூ. 25 லட்சம் நிதி தருவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





