பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவுக்கு விடை கொடுத்த அட்லி, இந்தி திரை உலகிற்கு சென்றார். அங்கு பாலிவுட் சக்கரவர்த்தியான ஷாருகானுடன் கைகோர்த்து ஜவான் திரைப்படத்தை அவர் கொடுத்தார். இதில் கதாநாயகியாக தமிழில் இருந்து நயன்தாரா. வில்லனாக விஜய் சேதுபதி இடம் பிடித்தனர்.
ஆனால் இவர்களுக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று பலரும் கூறினார்கள். இது ஒரு பக்கம் இருக்க ஜவான் திரைப்படம், தமிழ் திரையுலகில் பார்த்து பழகிப்போன கதை தான் என்றாலும் அது இந்தி திரை உலகுக்கு புதிதாக இருந்ததால் அங்கு சக்கை போடு போட்டது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு, தற்போது வரை எந்த திரைப்படமும் எடுக்காமல் இருக்கிறார் அட்லி. ஏற்கனவே விஜய் ஷாருக்கான் என பெரிய நட்சத்திரங்களுடன் மட்டுமே பணிபுரிந்த அவர் மீண்டும், ஒரு பெரிய ஸ்டாருடன் நடிக்க தான் திட்டமிட்டு இருந்தார். அவர் சல்மான் கானுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்றால் அதில் கமலஹாசனும் இருப்பார் என்று பலரும் கூறினார்கள். இதற்கான பிரீ ப்ரோடுக்ஷன் பணிகளும் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் அட்லி.
ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தின் மூலம், இந்திய சினிமாவில் அல்லு அர்ஜுன் வேறொருத்தடத்தில் கால் பதித்திருக்கிறார். இந்த சமயத்தில்தான் அவர் அட்லி கதையைத் தேர்ந்தெடுத்து இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறதாம். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம் அட்லி.
இது மட்டுமல்ல படத்தில் இரண்டு ஹீரோ என்கிறார்கள். ஒரு ஹீரோ நிச்சயம் தமிழ் சினிமாவில் இருந்து தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல படத்தில் மூன்று ஹீரோயின்கள் வருகிறார்களாம். இதில் ஒருவர் ஜான்வி கபூர் என்பது உறுதியாகிவிட்டது. 600 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





