பான் இந்தியா திரைப்படங்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் பான் இந்தியா படமாகத்தான் நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையையும் அது படைத்தது. இதன் பிறகு தான் பான் இந்தியா திரைப்படங்களுக்கு மவுசு கூட ஆரம்பித்தது.
அதற்கு ஏற்றது போலவே பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம், மற்றும் கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றன. தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கப்பட்ட இத்திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் தயாராகி ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குவித்தன.
இதேபோல் அண்மையில் ஷாருக்கான் நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருந்தன. இந்த வரிசையில் மிக முக்கியமான திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
செம்மரக் கடத்தலில் ஈடுபடும் இளைஞன் ஒருவன், அங்கிருந்து எப்படி மிகப்பெரிய பணக்காரனாகிறான் என்பதை மையப்படுத்தி தான் இந்த திரைக்கதை எழுதப்பட்டிருக்கும். இதில், முழுக்க முழுக்க புஷ்பா கதாபாத்திரமாகவே மாறி அந்த ரோலுக்கு உயிர் கொடுத்து இருந்தார் அல்லு அர்ஜுன். திரையில் தோன்றும் அவரின் ஒவ்வொரு காட்சிகளும் திருவிழா கோலம் பூண்டன.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் படத்திற்கு வலு சேர்த்தது. இதனால் புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் குவிக்க, தேசிய விருதையும் பெற்றது. இப்படியான சூழலில்தான் தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. முந்தைய பாகத்தை விட அல்லு அர்ஜுன் இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.
படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதெல்லாம் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். படம் வெளியான இரண்டே நாட்களில் மட்டும் 449 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அப்படி என்றால் இன்னும் நான்கே நாட்களில் படம் ஆயிரம் கோடி ரூபாய் தொட்டுவிடும் என்று பலரும் ஆருடம் தெரிவித்து வருகின்றனர்.





