தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி அவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரது படங்களை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளார். அதே போல் பிற நடிகர்களின் படங்களையும் நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தயாரித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை தயாரித்தது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்தான். அதே போல் கடந்தாண்டில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை தயாரித்ததும் கமல்ஹாசனின் இதே நிறுவனம்தான். இப்படி கமல் பல படங்களை சொந்தமாக தயாரித்திருக்கிறார்.
நடிகராக பாடகராக இயக்குனராக நடன இயக்குனராக தயாரிப்பாளராக கதை வசனகர்த்தாவாக டெக்னீஷியாக தமிழ் சினிமாவில் சகல கலைகளும் கற்ற சகலகலா வல்லவன் என்ற பெயர் கமல்ஹாசனுக்கு இருக்கிறது. அதனால் அவர் பல படங்களை சொந்தமாக தயாரித்த நிலையில் பலமுறை பலத்த நஷ்டங்களையும் சந்தித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் பெயரை சொல்லி காஸ்டிங் ஏஜண்ட் என்றும் படங்களில் நடிக்க அறிமுக நடிகர் நடிகை வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பொய்யான பதிவை வெளியிட்டு பல மோசடி நபர்கள் சினிமா ஆர்வம் கொண்டவர்களை ஏமாற்றி வருகின்றனர். அவ்வப்போது தயாரிப்பு நிறுவனங்களும் எச்சரித்து வரும் நிலையில், இப்போது நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





