நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தைச் சேர்ந்த இவர் நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து நேரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால் என்னவாகும் என்பதையும், அதே நேரம் சரியாக இருக்கும் போது பிரச்சனைகள் எப்படி காணாமல் போகும் என்பதையும் மிகவும் சுவாரசியமாக கூறியிருந்தார் அல்போன்ஸ் புத்திரன். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், பெரிய அளவு வசூல் ஈட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்திரன். காலத்திற்கும் நின்று பேசும் காவியமாக மாறியது பிரேமம் திரைப்படம். மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் பரிச்சயம் ஆனது. குறிப்பாக அதில் இடம்பெற்று இருந்த, சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்துப் போனது.
ஆட்டோகிராப் படத்தைப் போன்று இது எடுக்கப்பட்டாலும், அதில் சொல்ல வந்த விஷயத்தை ஒரு கவிதையாக கூறியதால் அல்போன்ஸ் புத்திரன் பாராட்டப்பட்டார். இப்போது வரை பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் பேசப்பட்டுதான் வருகிறது. அதில் நடித்த நிவின் பாலிக்கு மிகப்பெரிய திருப்பு முனையை அந்த திரைப்படம் கொடுத்தது.
இப்படி பிரேமம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலமே மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டார் அல்போன்ஸ் புத்திரன். ஆனால் இதன்பிறகு அவருக்கு எந்த திரைப்படங்களும் பெரிய அளவு அமையவில்லை. 2022 ஆம் ஆண்டு வெளியான கோல்ட் திரைப்படமும் அந்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. நடுவே டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வைத்து அவர் இயக்கியிருந்த திரைப்படமும் கைவிடப்பட்டது.
இப்படியான சூழலில் தற்போது அல்போன்ஸ் புத்திரன் பல்டி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு சோடா பாபு எனும் கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் வரும் அவரது வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





