தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நாயகியாக வந்த சகோதரிகள் நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா. இருவரும் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ஏஆர்எஸ் கார்டன் என்ற ஸ்டுடியோவும் நடத்தி வந்தனர். இந்த படப்பிடிப்பு தளத்தில் டிவி சீரியல்கள் சினிமா படப்பிடிப்புகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நடிகை ராதா, தனது அக்கா அம்பிகாவும் சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் ஆகிய 2 பேரும் 46 கோடி ரூபாய் செக் மோசடி செய்ய முயன்றதாகவும் தன்னுடைய வங்கி கணக்கில் 2 முறை தன்னுடைய பழைய செக்குகளை போட்டு பணத்தை மோசடி செய்ய முயன்றதாகவும் புகார் அளித்தார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடிகை அம்பிகா பதில் அளித்து இருக்கிறார். தனது தங்கை நடிகை ராதாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை அம்பிகா கூறுகையில், நாங்கள் இருவரும் இணைந்து கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய சொத்துக்களை தனக்கே சொந்தம் என்று ராதா உரிமை கோருவது நியாயமற்றது.
வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஏஆர்எஸ் கார்டன் வளாகத்தின் அசல் ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்களை ராதா தன் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்களான எங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்கிறார். தொழில் நிமித்தமாகவும் குடும்ப பராமரிப்பதற்காகவும் முன்பே பேசப்பட்ட நிதி உதவிகள் மற்றும் கணக்கு வழக்குகளை காசோலை மூலம் தீர்க்கலாம் என்றபோது அதை தவறாக பயன்படுத்தி எங்கள் மீது போலீசில் பொய்யான புகார் தந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்த காலகட்டத்தில் ராதா அம்பிகா மற்றும் அவரது தாயார் ஆகியோர் எம்ஜிஆரிடம் உதவுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் இந்த ஏஆர்எஸ் கார்டன் பகுதி 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இந்த நிலம் அவர்களுக்கு தரப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. அன்று முதல் அது படப்பிடிப்பு தளமாக இருந்து வருகிறது.
இதுமட்டுமின்றி அம்பிகா ராதாவுக்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன. ஓட்டல் உள்ளிட்ட சில தொழில்களிலும் ராதா ஈடுபட்டு வருகிறார். ராதா அம்பிகா மட்டுமின்றி இன்னொரு சகோதரியும் இருக்கிறார். மேலும் 2 சகோதர்களும் உள்ளனர். குடும்ப சொத்துகள் பாகப்பிரிவினை பிரச்னையில் இந்த விவகாரத்துக்கு பின்னால் பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.





