கடந்த சட்டசபை தேர்தலின் போதும் அதற்கு முன்பு 2 ஆண்டுகளாகவும் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தொடர்ந்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அக்கட்சி தலைவர் விஜய் திமுக தலைவர் மற்றும் அன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று சொல்லி கலாய்த்து பேசினார்.
இது அரசியல் கட்சியினரிடையே பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. என்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்றும் விஜய் பகிரங்கமாக அறிவித்தார். திமுக ஒரு ஊழல் நிறைந்த கட்சி குடும்ப ஆட்சி நடத்துகின்றனர் என்றெல்லாம் வசைபாடினார். இப்போது முதல்வரான பிறகும் திமுகவை கடுமையாக விமர்சிப்பதை விஜய் கைவிடவில்லை.
சட்டசபைக்குள் எங்கே உங்க அப்பாவை காணோம் என்று நக்கலாக பேசுகிறார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டதை தாடையில் தட்டிக்காட்டி விஜய் கிண்டல் செய்தார். இப்படி பல விதங்களில் ஸ்டாலினை தொடர்ந்து விஜய் விமர்சித்து வருகிறார்.
ஆனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்திய போதும் தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவை ஸ்டாலினை விமர்சித்த போதும் திமுக தரப்பில் அதிக எதிர்ப்பை காட்டவில்லை. குறிப்பாக ஸ்டாலின் எதுவுமே கருத்து சொல்லாமல் தவிர்த்தார். இதுகுறித்து ஒருமுறை நேர்காணலில் பேசிய ஸ்டாலின், திமுகவை எதிர்த்துதான் 60 ஆண்டு கால அரசியல் நடந்து வருகிறது.
யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் திமுகவை எதிர்த்து பேசினால்தான் அவர்கள் மக்களின் கவனத்தை பெற முடியும் என்பதால் அப்படி பேசுகிறார்கள். இதை பெரிதாக எடுத்துக்கொள்ள எதுவுமில்லை என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார். ஆனால் இப்போது விஜய் குறித்தும் தவெக குறித்தும் சமீபத்தில் நடந்த திமுக முப்பெரும்விழாவில் கடுமையாக விமர்சித்து ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
தவெக ஆட்சியின் ஆணவத்துக்கும் அதிகார திமிருக்கும் விரைவில் முடிவு கட்டுவோம். அவர் செய்த அத்தனைக்கும் பதிலடி கொடுப்போம். அவர்களின் ஆணவத்தை அடக்குவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை இடைத்தேர்தலில் டிவிகேவை திமுக இறங்கி அடிக்க முடிவு செய்திருப்பது தவெகவினர் மத்தியில் கலக்கத்தை தந்துள்ளது.





