தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். முன்னணி நாயகன்கள் நடிக்கும் தெலுங்கு படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் மகன் அனிருத் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையில் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தவிர தனுஷ் நடித்த பல படங்களுக்கு அனிருத் இசையமைத்து பெரிய வெற்றியை தந்திருக்கிறது. அஜீத்குமார் நடிப்பில் நேற்று வெளியான விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளரும் அனிருத் தான். குட் பேட் அக்லி படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான்.
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளராக கமிட் செய்திருக்கின்றனர். ஆனால் அனிருத் 17 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. எனினும் ரஜினி, நெல்சன் ஆகியோரின் முக்கிய சாய்ஸ் அனிருத் என்பதால் சன் பிக்சர்ஸ் மறுப்பதற்கு வாய்ப்பில்லை.
இந்நிலையில் நேற்று விடாமுயற்சி படம் ரிலீஸானது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு அனிருத், படம் பார்க்க வந்துள்ளார். ரசிகர்கள் கூட்டத்தில் விடாமுயற்சி படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். விடாமுயற்சி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் பாடல்கள் இசை, பின்னணி இசையில் அனிருத் வேற லெவலில் அசத்தியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.
தியேட்டரில் படம் பார்த்த பிறகு வெளியே வந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கார் நிறுத்தியிருந்த பகுதியில் நின்றிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பிறகுதான், அனிருத் படம் பார்க்க சென்ற அவசரத்தில் நோ பார்க்கிங் இடத்தில் தனது காரை நிறுத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.
வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்ட பொது இடத்தில், விதிமீறி காரை நிறுத்தி சென்றதற்காக இசையமைப்பாளர் அனிருத்துக்கு, போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்தனர். ஸ்பாட் பைன் ஆக அந்த அபராத தொகையை போலீசாருக்கு செலுத்திய பின், அனிருத் அங்கிருந்து காரை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





