கிராமத்து படங்கள் என்றாலே அந்த படத்துக்கு பெரிய அளவில் பக்கபலமாக இருப்பது இசைஞானி இளையராஜா இசைதான். ராமராஜன் நடித்த படங்களின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த படத்தின் கிராமிய இசைதான். வயல் வெளிகளிலும் தென்னந்தோப்புகளிலும் மாந்தோப்புகளிலும் அருவிகளிலும் ஆறுகளிலும் நாயகன் நாயகி ஆடிப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் விஜய்குமார் ராதிகா நெப்போலியன் விக்னேஷ் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் கிழக்குச் சீமையிலே. கிராமத்து கதைக்களத்தில் உருவான இந்த படத்திற்கு இசையமைக்க கமிட் ஆனவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். சென்னைவாசியாக ஏஆர் ரகுமான் இப்படிப்பட்ட கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படத்துக்கு எப்படி இசையமைக்க போகிறார் என பலரும் சந்தேகப்பட்டனர்.
கிழக்குச் சீமையிலே படத்தை இயக்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் உள்ளூர ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. ஆனால் படம் வெளியான பிறகு மானூத்து மந்தையிலே மாங்குட்டி பெத்த மயிலே, ஆலமரக்கிளையே அரசமர இலையே எதுக்கு பொண்டாட்டி என்னை சுத்தி வெப்பாட்டி தென்கிழக்கு சீமையிலே செங்காட்டு பூமியிலே போன்ற பாடல்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
சென்னை நகரவாசியாக ஏஆர் ரகுமான் கிராமத்து பின்னணியில் உருவான படத்துக்கு இப்படி அசத்தலான இசையை தந்து விட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு பேசினர். பல ஆண்டுகளுக்கு பின் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழலில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகிறது. லப்பர் பந்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க கமிட் ஆகியிருக்கிறார்.
சென்னைவாசியாக உள்ள இசையமைப்பாளர் அனிருத் பிறந்தது முதல் சென்னையில் வாழ்பவர். கிராமத்து சூழலை அறியாதவர். அப்படிப்பட்ட அனிருத் முதன் முறையாக கிராமத்து பின்னணியில் உருவாகும் தனுஷ் படத்துக்கு இசையமைக்க கமிட் ஆகி இருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்துக்கு சூப்பராக இசையமைத்து ஏஆர் ரகுமான் பெயர் வாங்கியது போல, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்துக்கு சிறந்த கிராமிய இசை தந்து அனிருத் பேசப்படுவாரா என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





