தக் லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், மணிரத்னம், ஏ ஆர் ரகுமான், திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிலம்பரசன் மேடையில் தோன்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
மிகச் சிறிய வயதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பார்கள். பீச்சுக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால் என்னை மட்டும் எனது பெற்றோர் நடிக்க அனுப்பி வைத்தனர். எனக்கு அப்போது சங்கடமாக இருந்தது. மற்ற பிள்ளைகள் ஜாலியாக இருக்கும் போது நாம் மட்டும் ஒரு பக்கம் சூட்டிங் இன்னொரு பக்கம் படிப்பு என்று இருக்கிறோமே என்றெல்லாம் தோன்றியது.
அப்போதெல்லாம் என்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது 40 வருடங்கள் கழித்து நான் கமல்ஹாசன் உடன் நடிக்கிறேன். எனக்கு பாட தெரியும் ஆட தெரியும் என்று பலரும் சொல்வதற்கு காரணம் எனது பெற்றோர் தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டாம் எமோஷனல் ஆகிவிடுவீர்கள் என்று என் தந்தையிடம் கூறினேன். ஆனால் நான் இப்போது எமோஷனல் ஆகிவிட்டேன்.
உங்களுக்கே தெரியும் பீப் சாங் வந்தபோது என்ன ஆனது என்று. அப்போது அச்சம் என்பது மடமையடா படத்திலிருந்து டீசர் வெளியாக அதில் தள்ளி போகாதே பாடலை எனக்காக செய்து கொடுத்தார் ஏ ஆர் ரகுமான். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நானும் த்ரிஷாவும் மீண்டும் இணைந்து இருக்கிறோம். ஆனால் ட்ரெய்லரை பார்த்து பலரும் கேள்வி எழுப்பினர். திரிஷா கூறியது போல நீங்கள் படத்தை பாருங்கள்.
ட்ரெய்லர் வெளியான போது இனிமேல் நான் தான் ரங்கராய சக்திவேல் என்னும் வசனத்தை நான் சொன்னதும் பலரும் கமல் இடத்திற்கு என்னை வைத்து இணையத்தில் பேசினார்கள். என்றைக்கும் அவரிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஒரு பேட்டியில் கமல் சார் சொல்லி இருப்பார். என் தோளில் ஏறி இன்றைய இளைஞர்கள் செல்லுங்கள் என்று. சார் நீங்கள் எனக்கு ஏணி போல. உங்களை மதித்து தான் செல்வேன் மிதித்து செல்ல மாட்டேன்.
ரெட் கார்டு கொடுத்திருந்தபோது என்னை வைத்து படம் இயக்க பல தயாரிப்பாளர்களும் யோசித்தார்கள். அந்த சமயத்தில் தான் மணி சார் எனக்கு செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் அந்த வாய்ப்பு கிடைத்தது ஆனால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று பல்வேறு விஷயங்களை சிலம்பரசன் பேசியிருக்கிறார்.





