தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் அஜீத்குமார். 2025ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான மகிழ் திருமேனி இயக்கிய அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை, வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெறவில்லை. ஆனால் அடுத்ததாக இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இதையடுத்து மீண்டும் ஆதிரவிச்சந்திரனுக்கே தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜீத்குமார் வழங்கியிருக்கிறார். அதனால் ஏகே 64 படத்தை டைரக்ட் செய்வது ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது.
இப்போது நடிகர் அஜீத்குமார் 10 மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இந்த கார் பந்தயங்கள் வருகிற அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களுக்கு பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த வகையில் இப்போது 6 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் 4 மாதங்களில் கார் பந்தயங்கள் முடிவடைய உள்ளது.
அதன்பிறகு நவம்பரில் துவங்கும் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் அஜீத் குமார் கலந்து கொள்ள இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
ஏகே 64 படத்திற்காக நடிகர் அஜீத்குமாருக்கு 180 கோடி ரூபாய் சம்பளம் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரனுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் படத்தின் மொத்த பட்ஜெட் 260 கோடி முதல் 275 கோடி ரூபாய் வரை திட்டமிட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது இதில் ஏதோ நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் இன்னும் தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏகே 64 படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கதை டிஸ்கஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடிகர் அஜீத்குமார் தரப்பில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா செய்து தந்திருக்கிறார். அதற்கான மொத்த செலவையும் அஜித்குமார் ஏற்றிருக்கிறார். மேலும் இந்த படத்துக்கு இசையமைப்பதற்காக சமீபத்தில் அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்து ஏகே 64 படத்துக்கு இசையமைக்க அவரிடம் ஒப்புதல் பெற்று இருக்கின்றனர் என்ற லேட்டஸ்ட் தகவலும் வெளியாகி உள்ளது.





