சிவகார்த்திகேயன் தற்போது மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் மதராசி படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று, அதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. வரும் ஐந்தாம் தேதி மதராசி திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் நிலையில், அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்,
பல்வேறு பேட்டியில் படம் குறித்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். சென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு கொள்ளை கும்பல், ஆயுதங்களை கடத்திக்கொண்டு சென்னை நகருக்குள் நுழைவதும், அவர்களை எதிர்த்து சிறப்பு படையினர் போரிடுவதும்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு படைக் குழுவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ருக்மணி வசந்த் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் வித்யூட் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ரகு என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதன் திரைக்கதை கஜினி போன்று இருக்கும் எனவும் ஆக்சனை பொருத்தவரை துப்பாக்கி போல இருக்கும் எனவும் கூறி இருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இப்படியான சூழலில் அதன் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பட குழுவினர் பங்கேற்றுள்ளனர். அதில் அனிருத் பேசியிருப்பதாவது, எனது இசையில் முதல் முறையாக பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் எதிர்நீச்சல். அங்கு தான் எனக்கு சிவகார்த்திகேயனுடன் நட்பு ஏற்பட்டது. என்னுடைய சிறந்த நண்பர் அவர். அவர் வெற்றி பெறும் போதெல்லாம் நான் பெருமை அடைகிறேன்.
மதராசி திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அதில் இது என்னோட ஊரு நான் வருவேன் என்று சிவகார்த்திகேயன் கூறுவார். அதேபோலத்தான் என்னோட எஸ்கேவுக்காக நான் வருவேன். இன்னொரு 20 வருஷத்துல நான் பீல்ட் அவுட் ஆகி இருப்பேன். அப்போது கூட இங்கே சிவகார்த்திகேயன் ஜெயிப்பாரு. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் என்று பேசினார். அனிருத்தின் பேச்சை கேட்டு சிவகார்த்திகேயன் எமோஷன் ஆகி இருப்பதாக அங்கிருக்கும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.





