விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் 6ம் தேதி தொடங்கியது. ஒரு வாரம் கடந்த நிலையில், தற்போது 2வது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் சென்ற முதல் நாளிலேயே 24 மணி நேர எலிமினேஷன் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிக்பாஸ், வீட்டுக்குள் இருந்த சாச்சனாவை என்ற பெண் போட்டியாளரை வெளியேற்றினார். ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து பேட்மேன் ரவீந்தர் முதல் போட்டியாளராக எலிமினேஷன் செய்யப்பட்டு நேற்று இரவு வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் மிகவும் நியாயமானதாகவே பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. டாஸ்க்குகளில் அவர் பங்கேற்பது சிரமம் என்பதால், அவர் வெளியேறியதே பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
விஜய் சேதுபதி பொருத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனை விடவும் மிகவும் சிறப்பாக நடத்தி வருவதாக பார்வையாளர்களிடையே பாராட்டை பெற்று வருகிறார். கமல்ஹாசனை போல் தற்பெருமை பேசாமலும், பூசி மெழுகாமலும் நேரடியாக விஜய் சேதுபதி பேசுவது பார்வையாளர்களிடம் பலத்த கைதட்டலை பெற்று வருகிறது.
பிக்பாஸ் சீசன் 8ல் 2வது வாரமான இன்று 8வது நாளில் நாமினேஷன் செய்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த வாரத்தில் ஆண்கள் அணி, பெண்கள் அணியில் உள்ளவர்களையும், பெண்கள் அணி, ஆண்கள் அணியில் உள்ளவர்களையும்தான் நாமினேட் செய்ய முடியும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதில் ரஞ்சித், சவுந்தர்யா, சாச்சனா, ஜெபரி ஆகியோர் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதனால் இவர்கள் நால்வரும்தான் இந்த வார எலிமினேஷனில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே வீட்டுக்குள் இருக்கும் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து, பெண்கள் அணிக்கு விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை உன் சாயம் வெளுத்து போச்சு என்கிற வகையில் அன்ஷிதா அவரிடம் நேரடியாக பேசுகிறார்.
ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அன்ஷிதா முத்துக்குமரனை பார்த்து, நான் லைப்ல எப்பவுமே நடிக்க மாட்டேன். ஆனா நீ லைப்ல நல்லா நடிக்கறே என்கிறார். அதற்கு பதிலளித்த முத்துக்குமரன், நான் விளையாட வந்திருக்கேன், நான் பண்றது உங்களுக்கு மோசமா தான் தெரியும், ஏன்னா உங்களை எதிர்த்துதானே நான் விளையாட போறேன் என்கிறார். அதற்கு டென்ஷன் ஆன அன்ஷிதா, ரொம்ப நடிக்காதடா, உன்னிடம் பேச எனக்கு இஷ்டம் இல்லை, பேசாத போடா, பெரிய இது மாதிரி நெனப்பு என்றபடி எழுந்து கோபமாக செல்கிறார். அந்த பிரமோ வீடியோ இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.





