இந்திய அளவில் புகழ் பெற்ற இசைக்கலைஞராக இருப்பவர் ஏஆர் ரகுமான். 1980களில், மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிளஸ் 2 மாணவர் போல காட்சியளித்த அவரது இசையை பார்த்த தமிழ் சினிமா துறையே அசந்து போனது. முதல் படத்திலேயே அவரது சின்ன சின்ன ஆசை பாட்டுக்கு தேசிய விருது கிடைத்தது.
தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு என இசை உலகில் உச்சத்தை தொட்டவர் ஏஆர் ரகுமான். ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக மணிரத்னம், கே பாலசந்தர், ஷங்கர் உள்ளிட்ட பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு ஏஆர் ரகுமான் இசை பெரிய வெற்றியை கொடுத்தது.
ஜெய்ஹோ பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரகுமான் மத்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் என இதுவரை 7 முறை தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் ராயன் படத்தில் இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாகின. குறிப்பாக உசுரே நீதானே என்ற வரிகளை ஏஆர் ரகுமான் குரலில் கேட்டு ரசிகர்கள் சிலிர்த்து போயினர்.
இந்த சூழலில் நேற்று ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு, தன் கணவரை பிரிவதாக அறிவித்தார். அடுத்த ஆண்டில் 30 ஆண்டு திருமண நாளை கொண்டாடுவோம் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த பிரிவு ஏற்பட்டுவிட்டது. உடைந்த இதயங்களின் கனத்தில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்க கூடும் என ஏஆர் ரகுமான் அந்த பிரிவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.
இதற்கிடையே, ஏஆர் ரகுமானின் இசைக்குழுவில் உள்ள கிடாரிஸ்ட் பெண் கலைஞர் மோனிகாடே தன் கணவரை பிரிவதாக நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், அன்பான நண்பர்கள் குடும்பத்தினர் ரசிகர்கள் மற்றும் பின் தொடர்பவர்களுக்கு, நானும் என் கணவர் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருவரும் பேசி மனமொத்து இந்த முடிவை எடுத்தோம். அதனால் மனம் ஒத்து பிரிந்துவிடுவதே சரி என்ற முடிவுக்கு வந்தோம். இருப்பினும் இருவரும் இணைந்தே பணியாற்றுவோம். அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். நீங்கள் எதையும் தவறாக கணிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும், என்று மோனிகா டே கூறியிருக்கிறார். ஏஆர் ரகுமான், மோனிகா டே நட்பு காரணமாகவே சாயிரா பானு தன் கணவரை பிரிந்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.





