தமிழக அரசு சார்பில் கடந்த 13ம் தேதி மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைஞானி இளையராஜாவுக்கு அவரது அரை நூற்றாண்டு இசை சாதனைகளை பாராட்டி விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இளையராஜாவின் இசைக்கச்சேரியும் தொடர்ந்து அவரது வேலியண்ட் சிம்பொனி அரங்கேற்றம் விழா மேடையில் நிகழ்த்தி காட்டப்பட்டது. தொடர்ந்து ஸ்டாலின் உதயநிதி ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இளையராஜாவின் இசை பயணத்தை அவரது சாதனைகளை பாராட்டிப் பேசினர். இளையராஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ் சினிமா சார்ந்த மற்ற இசையமைப்பாளர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. இளையராஜாவே வேண்டாம் என்று சொன்னதால் தமிழக அரசு தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கவில்லை. என்றாலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசைஞானி இளையராஜாவுக்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த விழா குறித்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமை தேடித் தந்தவர் இசைஞானி. இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம் மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்.
குறிப்பாக திரை இசையை கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி எனும் சாதனை ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்கும் இசைத் துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது. அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு.
இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழ்நாடு அரசே ஒருங்கிணைத்துக் கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே என இசைப்புயல் ஏஆர் ரகுமான் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்





