2024 ஆம் ஆண்டு பிறந்தது முதல் தமிழ் சினிமாவில், குறிப்பிட்ட படங்களே வெளியாகி உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன்று ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள், விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அதேசமயம் அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன்று திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் வெளியானது. அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்த இந்த திரைப்படம், ரஜினி ரசிகர்களுக்கு சோகத்தையே கொடுத்தது.
இதன் பின்னர் வெளியான எந்த திரைப்படங்களும் ரசிகர்களை பெரிய அளவு கவரவில்லை. மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் 2 கே கிட்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த இடைவேளையில் மலையாளத்தில் வெளியான திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் பெருத்த வரவேற்பை பெற்றன.
குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை இங்குள்ள ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதேபோல் பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேசம் உள்ளிட்ட திரைப்படங்களும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
இந்த நிலையில், சிறு பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இந்த வாரம் விஷாலின் ரத்னம் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஹரி இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம், அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வெளியாக இருந்த நிலையில் அது தள்ளிப்போனது.
தற்போது அந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் மூன்றாம் தேதி சுந்தர் சி யின் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் திரையிடப்பட இருக்கிறது. இதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும், குரங்கு பெடல் திரைப்படமும் அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால், நிச்சயம் அடுத்த வாரம் வெள்ளித்திரை கொண்டாட்டமாக இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





