தமிழ் சினிமாவில் சில படங்கள் எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாத, மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிற படங்களாக இருக்கின்றன. அதில் குறிப்பாக சில படங்கள், சில நடிகர்களுக்கு அடையாளமாகவே மாறி விடுகின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 2009ம் ஆண்டில் வெளிவந்த சிவா மனசுல சக்தி, எஸ்எம்எஸ் என்று அப்போது அழைக்கப்பட்டது.
இந்த படத்தில் ஹீரோவாக, கொரியர் பாய் கேரக்டரில் ஜீவா நடித்திருந்தார். எப்எம் ரேடியோ ஆர்ஜேவாக அனுயா நடித்திருந்தார். ஜீவாவின் நண்பர் கேரக்டரில் சந்தானம் நடித்திருந்தார். அனுயாவின் அப்பாவாக பட்டிமன்ற நடுவர் கு ஞானசம்பந்தன், ஜீவாவின் அம்மாவாக ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.
ஒரு ரயில் பயணத்தில் மிலிட்ரி ஆபிசர் என பொய் சொல்லி ஏமாற்றும் ஜீவா, அவரிடம் ரேடியோ ஜாக்கியாக இருந்துக்கொண்டு, ஏர் ஹோஸ்டல் என்று பொய் சொல்லும் அனுயா என அவர்களுக்குள் ஏற்படும் முதல் சந்திப்பே பெரிய அளவில் படத்தில் ரசிக்கும்படியாக இருக்கும். இதில் சத்யன், அனுயாவின் தம்பியாக நடித்திருப்பார்.
காதலர்களுக்குள் ஏற்படும் மோதல், ஊடல் மற்றும் பிரச்னைகளை மையப்படுத்தி கலகலப்பாக எடுக்கப்பட்ட இந்த படம் ஜீவாவுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சந்தானம் காமெடி இந்த படத்தில் பேசப்பட்டது. மீண்டும் இந்த படத்தை 2ம் பாகமாக எடுக்க இயக்குனர் எம் ராஜேஷ். ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்த பிரதர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், அடுத்ததாக சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்திலும் ஜீவாதான் ஹீரோவாக நடிக்கிறார். அனுயா உடல் பருமன் தோற்றத்தில் இருப்பதால் அவர் மீண்டும் நாயகியாக நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டராக காமெடி ரோலில் நடித்தவர் சந்தானம். அவர் இப்போது ஹீரோவாகி விட்டதால், சிவா மனசுல சக்தி 2ம் பாகத்தில், சந்தானம் கேரக்டரில் நடிக்க யோகிபாபுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.





