விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இம்மாதம் 6ம் தேதி துவங்கியது. கடந்த 18 நாட்களாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 9 ஆண்கள், 9 பெண்கள் என 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பேட்மேன் ரவீந்தர், 2வது வாரத்தில் நடிகர் அர்னவ் ஆகியோர் வெளியேறிய நிலையில், இப்போது 9 பெண்கள், 7 ஆண்களுடன் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. விரைவில் ஒயில் கார்டு முறையில் சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாகவும் தகவல் உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். துவக்கத்தில் இருந்தே நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை நேருக்கு நேராக வார்த்தைகளால் விமர்சித்து பேசுவதும், சட்டென முகத்தில் அடித்தால் போல் பதில் சொல்வதும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே மேடை ஏறிய நடிகர் ரஞ்சித்தை, கவுண்டம்பாளையம், பீஷ்மர் படங்களை ஒப்பிட்டு பேசி உங்கள் உண்மையான முகம் இதுவா எனக் கேட்டு அவரை அவமானப்படுத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் ரஞ்சித்தின் நண்பர், சாப்டீங்களா, எங்க ஊர்ல இப்படி முதல்ல கேட்போம் என்று சொன்னதையும் கலாய்த்து அசிங்கப்படுத்தியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
நடிகர் கமல்ஹாசன் 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய போதும் ப போட்டியாளர்களை நேரடியாக அவர் விமர்சித்து பேசியது கிடையாது. கிண்டலடித்து கிடையாது. யாரையும் மனம் நோகும் படியாக கமல் எந்த சூழ்நிலையிலும் பேச மாட்டார். சில நேரங்களில் மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட போட்டியாளர்களை, இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை செய்வது யாராக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்றுதான் நாகரிகமாக சொல்வாரே தவிர யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்தியது இல்லை. அவர்களது கேரக்டரை விமர்சிக்கவும் மாட்டார்.
ஆனால் நடிகர் விஜய் சேதுபதி அவர்களை குத்திகாட்டிப் பேசுவதும் நேருக்கு நேராக விமர்சிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பாக போட்டியாளர் அருண் பிரசாத்தை குங்குமப்பூ என்று கிண்டல் செய்தார். இந்த வீட்டுக்குள் சொம்பு தூக்கி யாருமில்லை என்று அருண் பிரசாத் சொன்னபோது, சரி அப்போ அதை நீங்களே வெச்சுக்குங்க, உட்காருங்க என நேரடியாக விமர்சித்து அவரை அவமானப்படுத்தினார்.
இதுகுறித்து அருண் பிரசாத்தின் நெருங்கிய தோழியும் கடந்த முறை பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான சீரியல் நடிகை அர்ச்சனா, இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் சேதுபதி, அருண் பிரசாத்தை கலாய்க்கும் வீடியோவை பதிவிட்டு ஸ்டாண்ட்பை அருண் பிரசாத் என குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அருண் பிரசாத்தை விமர்சித்த விஜய் சேதுபதிக்கு பதிலடி தந்திருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





