இந்திய மொழியில் எந்த பிரபலமான நட்சத்திரம், முன்னணி நடிகர் நடித்த படம் வெளியானாலும் முதல் நாளில் எவ்வளவு வசூல் என்ற தகவல் தீயாக பரவி விடுகிறது. முதல் நாள் 2ம் நாள் 3ம் நாள் ஒரு வாரம், 15 நாட்கள் என அந்த படங்களின் வசூல் நிலவரம் நாளுக்கு நாள் அப்டேட் செய்யப்பட்டு, அந்த நடிகர்களின் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைக்கிறது.
அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில நடிகர்களின் படங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கின்றன. முதல் நாள் 2ம் நாள் வசூலிலேயே அந்த படம் பிளாப் ஆகி விட்டதை ரசிகர்களுக்கு பறைசாற்றி விடுகின்றன. ஏனெனில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்தான் அந்த படத்தை வெற்றியோ தோல்வியோ ஆக்குகிறது. அதனால் முதல் நாளே படத்தின் ரிசல்ட் தெரிந்து விடுகிறது.
இந்த விவகாரத்தில், தங்களது படம் பிளாப் ஆகியிருப்பதை, ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறாததை மறைக்கும் விதமாக சில தயாரிப்பு நிறுவனங்கள் படங்கள் ரிலீஸான ஒரு சில தினங்களுக்கு மிகவும் அதிக வசூல் செய்ததாகவும் படம் பெரிய வெற்றியை வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருப்பதாகவும் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த ஆண்டில் வெளியான தி கோட் படத்துக்கும் அப்படி ஒரு தவறான தகவல் பரவியதாகவும் உண்மையில் தி கோட் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஒரு தரப்பினர் முன்வைத்த நிலையில் அந்த தகவல் இணையத்தில் வைரலாகி தளபதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுபற்றி கூறியதாவது, தி கோட் படம் 450 கோடி ரூபாய் வசூல் என்று பலரும் கூறி வருகின்றனர். அதில் திரையரங்கை தாண்டி உள்ள வியாபாரம் எதுவும் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் இன்னும் வசூல் நிலவரம் பெரியதாக இருக்கும்.
நாங்கள் சொன்னது தியேட்டர்களில் ஆன மொத்த வசூல் மட்டும்தான். அதிலிருந்து வரி எல்லாம் கழித்து கணக்கிட வேண்டும். பெரிய படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே தியேட்டர் வசூலை தாண்டிய அனைத்து வியாபாரமும் பெரிய உறுதுணையாக இருக்கும். அதிலிருந்து பெருவாரியான பணத்தை நாங்கள் எடுத்து விட முடியும். தியேட்டர் வசூலில் இருந்து வரும் பெரும்பாலான தொகை லாபமாக மட்டுமே இருக்கும், என்று அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





