தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என 1990களிலேயே பெயர் எடுத்தவர் ஷங்கர். இதுவரை 30 ஆண்டுகளில் அவர் 15 படங்கள் மட்டுமே டைரக்ட் செய்திருக்கிறார். இதில் 1 இந்தி 1 தெலுங்கு படமும் இயக்கி உள்ளார். கடைசியாக அவரது இயக்கத்தில் தமிழில் வெளியான இந்தியன் 2 படமும், தெலுங்கில் வெளியான கேம் சேஞ்சர் படங்களும் பலத்த தோல்வியை சந்தித்தன.
இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள் 1 மகன் இருக்கின்றனர். இதில் அதிதி ஷங்கர் மாவீரன் விருமன் போன்ற படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது இன்னொரு மகள் ஐஸ்வர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் 2வது திருமணம் சென்னையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர். இவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார். வழக்கமாக நடிகர்கள், இயக்குனர்கள் மகன்கள், மகள்கள் சினிமாவில் வாரிசுகளாக களம் இறங்கி வரும் சூழலில் அடுத்தக்கட்டமாக இயக்குனர் ஷங்கர் மகனும் சினிமாவில் நாயகனாக களத்தில் இறங்குகிறார்.
இயக்குனர் ஷங்கர் பெரிய இயக்குனராக உள்ள நிலையில், அவரே தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்ற சூழல் இருந்தாலும் இயக்குனர் ஷங்கர் அதை தவிர்த்து வருகிறார். தனது மகனை ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிய அனுமதித்த இயக்குனர் ஷங்கர், இப்போது அவரை மற்றொரு இயக்குனர் மூலமாக சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்ய உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடனப்புயல் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் பிரபுதேவா. ஆரம்பத்தில் பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். குறிப்பாக ஜெண்டில்மேன் சூரியன் வால்டர் வெற்றிவேல் இந்து உள்ளிட்ட படங்களில் அவரது ஒரு பாடல் நடனக் காட்சி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பாராட்டை பெற்றது. இதையடுத்து நடன இயக்குனர் பிரபுதேவாவை இயக்குனர் ஷங்கர் அவரது இயக்கத்தில் காதலன் என்ற படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார். அந்த படம் மாஸ் ஹிட் ஆனது.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த பிரபுதேவா, தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். அவரது இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இப்போது பிரபுதேவா இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கிறார். இந்த புதிய படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.





