தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் திருமணம் செய்துகொள்வது ஆண்டாண்டு காலமாக நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பலரது திருமண வாழ்க்கையை பார்த்தால், நடிகரின் மனைவியும் திரைத்துறை சார்ந்தவராக தான் இருக்கிறார். உதாரணமாக எம்ஜிஆர் மனைவி ஜானகி, சினிமாவில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான். கமல் மனைவியாக பல ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த கவுதமி ஒரு நடிகைதான்.
அதுபோல், நடிகர் கார்த்திக், சோலைக்குயில் படத்தில் நடித்த போது அவருடன் நடித்தவரையே மனைவியாக்கி கொண்டார். நடிகர் சூர்யா, ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை மணம்புரிந்தார். இப்படி திரைத்துறையில் நட்சத்திர தம்பதியர் இணைவது சகஜமாக நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இதில் தற்போது இரண்டு நடிகர்கள் சம்பந்திகளாக ஆகின்றனர் என்பதுதான் ஹைலைட்.அவர்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர்கள்தான். ஆக்ஷன் கிங் அர்ஜூன், காமெடி நடிகர் தம்பி ராமையா இருவரும்தான் சம்பந்திகளாக போகின்றனர். விரைவில் அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜூன் மகன் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை பல மாதங்களுக்கு பேசப்பட்ட நிலையில், விரைவில் இதற்கான நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.
நடிகர் அர்ஜூன், மிக தீவிரமான ஆஞ்சநேயர் பக்தர். அவரது படத்தயாரிப்புகளை கூட ஆஞ்சநேயர் படங்களுடன் தான் ஆரம்பிப்பார். தன் பக்தியின் வெளிப்பாடாக, சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில், தனக்கு சொந்தமான 20 ஏக்கர் தோட்டத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை, அர்ஜூன் பிரமாண்டமாக கட்டியுள்ளார்.
அந்த ஆஞ்சநேயர் கோவிலில் தான், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரது திருமண நிச்சயதார்த்த விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது ஒரு குடும்ப விழாவாக மட்டுமே இப்போது நடக்கிறது. திருமணத்தை மிகப்பெரிய அளவில், பிரமாண்டமாக நடத்த அர்ஜூன் திட்டமிட்டுள்ளார். பான் இந்தியா ஸ்டார் ஆன அர்ஜூனின் மகள் திருமண விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா உலகை சேர்ந்த அனைத்து நடிப்பு ஜாம்பவான்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கலாம்.





